பிரதமர் பதவி.. உ.பி, பீகார் மற்றும் 5 தென் மாநிலங்ளை குறி வைக்கும் விஜய்யின் மெகா பிளான்!
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சமீபத்திய மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்தது இந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், வெறும் பி.ஆர் பிரச்சாரங்களோடு நின்றுவிடாமல், களத்தில் நேரடியாக கட்சிக் கட்டமைப்பை உருவாக்க விஜய் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

2029 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து, தமிழ்நாடு தவிர்த்து அண்டை தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார் ஆகியவற்றில் கட்சியின் புதிய கிளை அமைப்புகளைத் தொடங்க விஜய் திட்டமிட்டு வருவதாகத் தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் மாநிலங்களில் முழு வீச்சு களம்
விஜய்யின் இந்த தேசிய திட்டத்தில் தென்னிந்தியாவிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் மக்கள் செல்வாக்கும் இருந்து வருகிறது. அதேபோல் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சினிமா மூலம் அவருக்குப் பரவலான வரவேற்பு உண்டு.
இந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி, ஐந்து தென் மாநிலங்களிலும் தவெகவின் மாநிலக் கமிட்டிகள், மாவட்டப் பிரிவுகள் மற்றும் இளைஞரணி கட்டமைப்புகளை நேரடியாகக் கட்டமைக்க ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தொகுதி மறுவரையறை மற்றும் நிதிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தெற்கின் உரிமைக் குரலாகவும், ஒரு பொதுவான தென்னிந்தியத் தலைவராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த ஐந்து மாநிலங்களின் கட்டமைப்பு விஜய்க்கு உதவும் எனக் கருதப்படுகிறது.
உ.பி மற்றும் பிகாரில் புதிய யூனிட்டுகள் ஏன்?
தேசிய அளவில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றால், டெல்லி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் கட்சியின் இருப்பு மிக அவசியம். அதிலும் குறிப்பாக, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட பிகார் ஆகிய மாநிலங்கள் எந்தவொரு தேசியக் கட்சிக்கும் முதுகெலும்பாக உள்ளன.
ஏற்கனவே வட இந்திய சமூக வலைதளங்களில் விஜய்யின் நிர்வாகத் திறன், அதிரடி முடிவுகள் மற்றும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து இந்தி மொழியில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த இணையவெளி ஆதரவை வெறும் லைக்குகளோடு விட்டுவிடாமல், களத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்ட அளவிலான அமைப்புகளாக மாற்ற விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக லக்னோ மற்றும் பாட்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்க முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
100 இடங்கள் இலக்கு: தீவிர தேர்தல் வியூகம்
2029 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு, குறைந்தபட்சம் 100 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதே தவெகவின் இலக்காகப் பேசப்படுகிறது. அத்தகைய ஒரு சூழல் உருவானால் மட்டுமே, மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் பட்சத்தில் 1996 தேவகவுடா பாணியில் அல்லது ஒரு பலமான கூட்டாட்சி கூட்டணியின் மூலம் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடியும் என்பது கட்சி மேலிடத்தின் கணக்கு.
இதற்காகத்தான் கட்சியை 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரிலிருந்து 'தேசிய வெற்றி கழகம்' அல்லது 'நேஷனல் டிரையம்ப் பார்ட்டி' என முறைப்படி மறுசீரமைத்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சியாகப் பதிவு செய்வதற்கான சட்ட ரீதியான ஆலோசனைகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்
தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களில், குறிப்பாக வட இந்தியாவில் வேரூன்றி செயல்படும் பாஜக, காங்கிரஸ் மற்றும் வலிமையான மாநிலக் கட்சிகளை எதிர்த்து புதிய கட்சிக் கிளையைக் கட்டமைப்பது சாதாரண காரியமல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கள அளவிலான தொண்டர் பலம், உள்ளூர் அரசியல் தலைவர்களின் ஆதரவு மற்றும் தேர்தல் கூட்டணிகள் ஆகியவை பிற மாநிலங்களில் மிக அவசியமாக இருக்கும்.
இருந்தபோதிலும், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தனது பார்வையை முழுமையாக டெல்லியை நோக்கித் திருப்பி, தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் கட்சிக் கிளையைத் தொடங்க விஜய் எடுத்துள்ள இந்த தைரியமான முடிவு, 2029 தேர்தல் களத்தில் மிகப்பெரிய அரசியல் புயலை உருவாக்கத் தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications
