ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த விஜய்! தவெக கல்வி விருது விழாவில் பங்கேற்க சென்னை வருகிறாரா?
சென்னை: தவெகவின் 2ஆம் கட்ட கல்வி விருது விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அழைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராகுல் காந்தியின் நேர ஒதுக்கீட்டை பொறுத்து கல்வி விருது விழாவை நடத்த தவெக திட்டமிட்டிருக்கிறது. இதனால் தவெக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் கூடுதல் நெருக்கம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி உருவாகியது. இதன்பின் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன்பின் சென்னை வந்த ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை அவரின் வீட்டில் சந்தித்து ஆலோசனைகள் மேற்கொண்டார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களுக்கு தவெக பெரியளவில் ஆதரவு கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்றார். ராகுல் காந்திக்கு அருகில் விஜய்க்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் காங்கிரஸ் - தவெக இடையிலான கூட்டணியில் நல்ல இணக்கம் இருப்பதாக இரு கட்சியை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். தற்போது இந்த கூட்டணி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அண்மையில் தவெக சார்பாக முதற்கட்ட கல்வி விருது விழா சென்னையில் நடைபெற்றது. தற்போது அடுத்தக் கட்டமாக நடக்க உள்ள தவெக கல்வி விருது விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போதே ராகுல் காந்தியிடம் இதுதொடர்பாக விஜய் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்து அழைப்பு விடுக்க இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தவெகவின் 2ஆம் கட்ட கல்வி விருது விழா ராகுல் காந்தியின் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. நாளை தவெகவின் கல்வி விருது விழா நடப்பதாக இருந்தது.
ஆனால் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அது ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தவெகவினர் உறுதி செய்துள்ளனர். விஜய் மற்றும் ராகுல் காந்தி இருவரும் இணைந்து கல்வி விருதுகளை மாணவர்களுக்கு வழங்கினால், அது மிகப்பெரிய அளவில் மக்களிடையே விவாதப் பொருளாக மாறும் என்று கணக்கு போட்டுள்ளனர்.
இருப்பினும் ராகுல் காந்தி தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல் கடந்த முறை ராகுல் காந்தி சென்னை வந்த போதே, விஜய் - ராகுல் காந்தி இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் கல்வி விருது விழாவில் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
