விஜய் எழுச்சியால் மோடிக்கோ திமுகவுக்கோ ஆபத்தில்லை! மாட்டியது ராகுல்தான்! அறிவாலய படியேறும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி விஜய் எடுத்து வரும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தவெக தலைவர் விஜய் எடுத்து வரும் அடுத்தடுத்த தேசிய அரசியல் நகர்வுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் தன்னை 2029 லோக் சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான காய் நகர்த்தல்களை விஜய் செய்து வருகிறார்.

CM Vijay

சமீபத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் தேசிய அளவில் 3-வது இடத்தைப் பிடித்தது, உ.பி., பிகார், மேற்கு வங்கம் மற்றும் தென் மாநிலங்களில் கட்சிக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்கள், மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் ராகுல் காந்தியின் தூதர்களான மாணிக்கம் தாகூரையும் பிரவீன் சக்கரவர்த்தியையும் விஜய் கண்டுகொள்ளாமல் திருப்பி அனுப்பியது ஆகியவை பெரும் பேசுபொருளாகியுள்ளன.

பொதுவாக, ஒரு புதிய தலைவரின் அசுர எழுச்சி ஆளுங்கட்சியான பாஜகவிற்கோ அல்லது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கோதான் ஆபத்தை விளைவிக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், கள எதார்த்தத்தை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள், "விஜய்யின் இந்த அதிரடி வளர்ச்சியால் உண்மையில் பாதிக்கப்படப் போவது பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது திமுகவோ அல்ல.. மாறாக காங்கிரஸ் கட்சிதான்" என்று ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

தவெக கழற்றிவிட்டால் காங்கிரஸின் கதி என்ன?

தமிழகத்தில் தவெக தனித்து 35 சதவீத வாக்குகளையும் 108 இடங்களையும் கைப்பற்றி ஆட்சி அமைத்தபோது, ஆட்சி அமைக்கப் போதிய தனிப் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே தவெக அமைச்சர்கள் விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் என வெளிப்படையாக முன்னிறுத்தி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், சட்டமன்றத்தில் நிலவும் காலித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை நீக்க நீதிமன்றத்தை நாடி, தனிப் பெரும்பான்மைக்கான 118+ இடங்களை சொந்த பலத்தில் எட்டிவிட தவெக துடிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸின் பிடியிலிருந்து தவெக முழுமையாக விடுபட்டு, தேசிய அளவில் விஜய்யை அதிகாரப்பூர்வ பிரதமர் வேட்பாளராக தவெக அறிவித்தால், காங்கிரஸை அவர்கள் கூட்டணியை விட்டே கழற்றிவிடுவது உறுதியாகிவிடும்.

அத்தகையதொரு சூழல் உருவானால், தமிழகத்தில் தனித்து நின்று ஒரு நாடாளுமன்றத் தொகுதியில்கூட டெபாசிட் பெற முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படும். அப்போது, வேறு வழியே இல்லாமல் தங்களின் பழைய கூட்டணிக் கூட்டாளியான அறிவாலயத்தின் கதவுகளை மீண்டும் தட்டுவதைத் தவிர காங்கிரஸுக்கு வேறு வழியே இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திமுகவின் தேவை.. ஒரு தேசிய பிரதமர் முகம்

திமுகவை ஒரே இரவில் கழற்றிவிட்டு தவெகவுடன் காங்கிரஸ் சென்றதால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கடும் அதிருப்தியில் 'இந்தியா' கூட்டணியை விட்டும் விலகியிருந்தது உண்மைதான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது திமுகவின் அரசியல் கணக்குகள் முற்றிலும் மாறுபட்டவை.

மத்தியில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்து வரும் திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களிடம் வாக்கு கேட்கும்போது "மத்தியில் யார் பிரதமர்?" என்ற கேள்விக்கு ஒரு தேசிய முகத்தை முன்னிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். வட மாநிலங்களில் செல்வாக்குள்ள ஒரு தேசியக் கட்சியின் தலைமை இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மாநிலக் கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். அந்தத் தருணத்தில், தேசிய அளவிலான மாற்று முகமாக ராகுல் காந்தியின் அடையாளம் திமுகவுக்கும் அவசியமாக இருக்கும்.

மறப்போம் மன்னிப்போம்' பாணியில் இணையுமா?

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்பார்கள். தவெகவால் கைவிடப்பட்டு நிற்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படும்போது, தேர்தல் ஆதாயத்திற்காக பழைய கசப்புகளை மறந்து, 'மறப்போம் மன்னிப்போம்' என்ற அணுகுமுறையை திமுக தலைமை கையிலெடுக்குமா என்ற கேள்வி தற்போது எழுகிறது.

2019 மற்றும் 2024 தேர்தல்களில் ராகுல் காந்தியை முன்மொழிந்து முழுமையாகக் கைதூக்கிவிட்ட ஸ்டாலினுக்கு காங்கிரஸ் செய்த நம்பிக்கை துரோகம் ஒருபுறம் இருந்தாலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தவும், தமிழகத்தில் தனது தொகுதிகளைத் தக்கவைக்கவும் காங்கிரஸை மீண்டும் அரவணைத்துக் கொள்ளும் சமரசத்திற்கு திமுக வர வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

விஜய் வீசிய வலையில் சிக்கும் காங்கிரஸ்!

சுருக்கமாகச் சொன்னால், பிரதமர் நாற்காலியைக் குறிவைத்து விஜய் விரிக்கும் இந்த வலை, இறுதியில் காங்கிரஸைத் தவெகவின் தயவிலிருந்தும் அப்புறப்படுத்தி, மீண்டும் திமுகவின் வாசலிலேயே தஞ்சம் புக வைக்கும் நிலைமையை உருவாக்கத் தொடங்கிவிட்டது.

தவெகவின் தேசியப் பசியால் டெல்லியில் ராகுல் காந்தியின் செல்வாக்கு சரிந்து வரும் அதே வேளையில், தமிழகத்திலும் தனது இருப்பைத் தக்கவைக்க மீண்டும் அறிவாலயத்தின் வாசலில் காங்கிரஸ் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுமா என்பதை 2029 தேர்தல் களம் மிக விரைவிலேயே உணர்த்திவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+