“10 நாட்களில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் விஜய்”- அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன அப்டேட்
சென்னை: 10 நாட்களில் முதலமைச்சர் விஜய் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டசபையில் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில், வகுப்பறைக்கு அருகிலேயே மனநல ஆலோசனைகள் கிடைக்கும் வகையில் சென்னை கவுன்சிலர்ஸ் பவுண்டேஷன் ஆதரவுடன் 78 நல்வாழ்வு தூதர்களை நியமிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், "நான் ஒரு கிராமத்து இளைஞனாக இருந்து பல கனவுகளுடன் சென்னைக்கு வந்து, படிப்படியாக உயர்ந்து இன்று உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன். நமது கையில் உள்ள செல்போனை ஆன் செய்துவிட்டால் போதும், அது நம்மை பாசிட்டிவாகவும், நெகட்டிவாகவும் மாற்றிவிடுகிறது.
நான் ஒரு அமைச்சராக இல்லாமல் அண்ணனாக கேட்டுகொள்கிறேன். 24 மணிநேரமும் செல்போனில் சமூக வலைதளங்களில் மூழ்காமல், போனை வைத்துவிட்டு பெற்றோருடன் பேசுங்கள், நன்றாக சாப்பிடுங்கள், பெற்றோருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாகவே, பெற்றோர்களை விட மாணவர்கள் அவர்களது ஆசிரியர்களிடம் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் நலனில் பெரும் பங்கு உள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "நாடு முழுவதும் ஒரு கோடி மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு இருப்பதற்கு காரணம், கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களால், நகர்ப்புறத்தில் உள்ள மாணவர்களுடன் போட்டியிட்டு தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை.
எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக போராடி வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இதை எதிர்த்து போராடி வருகிறார். மாணவர்கள் எப்போது தங்களின் உண்மையான திறமையை உணர்கிறார்களோ அன்றுதான் வாழ்க்கையில் சாதிப்பார்கள். கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் ஐ.பி.எல். போட்டியில் சாதனை படைத்துள்ளார்." எனப் பேசினார்.
மேலும், மாணவர்களுக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், கொள்கை அளவில் தயாராக உள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பில் 200 ஒருங்கிணைந்த விடுதி வளாகங்கள் தனியார் பங்களிப்போடு கட்டப்பட உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தையும் முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், "10 நாட்கள் காத்திருந்தால் முதலமைச்சர் விஜய் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார். மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி கொடுக்கத்தான் போகிறோம். கடந்த 2025-ஆம் ஆண்டு மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்ட விலையை விட இப்போது விலை அதிகமாக இருக்கிறது. மேலும், அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினியை வழங்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், 10 நாட்கள் காத்திருந்தால் முதலமைச்சர் விஜய் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டசபையில் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
