விஜய் நம்பும் ஒரே ஆள்.. நயீம் மூசாவுக்கு வரப்போகும் பெரிய பதவி? முதல்வரின் அதிரடி திட்டம்!
சென்னை: தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்ததில் இருந்தே நிர்வாக மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் குறித்த தகவல்கள் கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகின்றன.
அந்த வகையில், தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ரகசிய தகவல்களின்படி, விஜய்யின் நீண்டகால நிழலாகவும், தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பாளராகவும் இயங்கி வரும் நயீம் மூசாவுக்கு மாநில அரசின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பிலோ அல்லது உள்துறை சார்ந்த சிறப்பு ஆலோசனைக் குழுவிலோ முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பாகத் திரைத்துறையிலிருந்து தீவிர அரசியலுக்கு விஜய் நுழைந்த காலம் முதல், அவரின் அனைத்துப் பொதுக்கூட்டங்கள், பிரசாரப் பயணங்கள் மற்றும் விக்கிரவாண்டி மாநாடு, போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், விஜய்க்கான 360 டிகிரி பாதுகாப்பை உறுதி செய்வதிலும் நயீம் மூசா மிக முக்கியப் பங்காற்றியுள்ளார்.
துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஜென்டர் செக்யூரிட்டி நிறுவனத்தின் நிறுவனரான இவர், ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் போன்ற சர்வதேச பிரபலங்களுக்கும் உலகத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கிய சர்வதேச அனுபவம் கொண்டவர்.
பொதுவாக மாநில முதலமைச்சருக்கு அரசு வழங்கும் Z-பிளஸ் மற்றும் உளவுத்துறை பாதுகாப்புப் படைகள் இருக்கும் போதிலும், விஜய்யைப் பொறுத்தவரை தனக்கு மிகவும் நம்பிக்கையான நபர்களின் நேரடிப் பார்வையில் பாதுகாப்பு மேலாண்மை இருப்பதை விரும்புகிறார். குறிப்பாகக் பிரம்மாண்ட பிரசாரங்களின் போது, லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பாராத கூட்ட நெரிசலைத் துல்லியமாகக் கணித்து, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விஜய்யைப் பாதுகாத்ததில் மூசாவின் உத்திகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
முதல்வர் விஜய்யின் உடல் மொழி, சிறிய கண் அசைவு, அவர் எப்போது பொதுமக்களை நெருங்க விரும்புகிறார், எப்போது சற்று பின்வாங்க வேண்டும் என்பதை நயீம் மூஸா பல வருடங்களின் அனுபவத்தால் அறிந்திருக்கிறார். அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு கடமை சார்ந்தது என்றால், நயீம் வழங்கும் பாதுகாப்பு தீவிர விசுவாசம் மற்றும் தனிப்பட்ட அக்கறை சார்ந்தது. இதனாலேயே காரின் கதவைத் திறப்பது முதல் மேடையில் மிக அருகில் நிற்பது வரை நயீம் மூஸாவை மட்டுமே விஜய் அனுமதிக்கிறார்.
அரசியல் நிர்வாகத்தில் விஜய்க்கு பல 'வலது கரங்கள்' இருந்தாலும், அவரது உயிர் மற்றும் உடல் பாதுகாப்புக்கு அரணாக இருப்பவர் நயீம் மூஸா ஒருவரே. முதல்வர் எங்கு சென்றாலும் - கோட்டைக்கு, மாவட்ட ஆய்வு பயணங்களுக்கு - அரசுப் பாதுகாப்பு வாகனங்களுடன் நயீமின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையும் இணைந்து செல்கிறது.
தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாநிலத்தில் நடக்கும் கூட்டங்களின் கூட்ட நெரிசல் மேலாண்மை, முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் (VIP Security Protocols) மற்றும் நவீனப் பாதுகாப்பு உத்திகளை மேம்படுத்த ஒரு சிறப்பு ஆலோசகரை அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமிக்க அரசுத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, நயீம் மூசாவை மாநில உள்துறைக்கு உட்பட்ட சிறப்புப் பாதுகாப்பு ஆலோசகராகவோ அல்லது முதலமைச்சரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவோ நியமிக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், அரசுத் துறையில் நேரடியாக ஒரு தனியார் பாதுகாப்பு ஆலோசகரை நியமிப்பது மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனான பணி ஒருங்கிணைப்பு குறித்த சில நிர்வாக விவாதங்களும் எழுந்துள்ளன. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்த கே.பி. ராமகிருஷ்ணன் போன்ற நம்பிக்கையான நிழல் மனிதர்களின் வரிசையில், தற்போது முதலமைச்சர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய முதன்மை நபா் நயீம் மூசா என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
