14 நாட்களுக்கு பின்.. மருத்துவமனைக்கு விசிட்! கொளத்தூர் TVK MLA வி.எஸ்.பாபுவை பார்த்த முதல்வர் விஜய்
சென்னை: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் தமிழக முதலமைச்சர் விஜய். கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் விஎஸ் பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் அனுமதிக்கப்பட்டவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 14 நாட்களாக வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வி.எஸ்.பாபுவின் உடல்நிலை பற்றிய விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் அவரின் உடல்நிலை பற்றிய அறிக்கை ஒன்றை எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருக்கிறது. இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார். எம்ஜிஎம் மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர், விஎஸ் பாபுவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவருக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவ வல்லுநர்கள் குழுவிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
வி.எஸ்.பாபுக்குச் சிறந்த உயர்தர மருத்துவச் சிகிச்சைகள் தடையின்றி முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அவர் விரைவில் பூரண குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும், தனது மக்கள் பணிகளைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், அவரை முதல்வர் சந்திக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. எனினும், முதல்வர் விஜய் போனில் விசாரித்ததாக தவெக அமைச்சர்கள் கூறினர். இந்நிலையில், 14 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் முதல்வர் விஜய்.


Click it and Unblock the Notifications
