Vijay Convoy: நீலாங்கரை வீட்டுக்குத் திரும்பும் போது முதல்வர் விஜய்யின் கான்வாய் வாகனம் விபத்து! நடந்தது என்ன?
சென்னை: முதலமைச்சர் விஜயின் கான்வாய் வாகனம் சென்று கொண்டிருந்தபோது திருவான்மியூரில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் கான்வாய் வாகனம் அவரது நீலாங்கரை இல்லம் நோக்கி சென்று கொண்டு இருக்கும்போது திருவான்மியூர் RTO சிக்னல் அருகே கார் ஒன்று குறுக்கே வந்ததால் கான்வாய் வாகனங்கள் அனைத்தும் உடனடியாக பிரேக் பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டன.

அப்போது அடையாறு துணை ஆணையாரின் கார் நிறுத்தியபோது, பின்னால் வந்த டெம்போ ட்ராவலர் வாகனம் அடையார் துணை ஆணையர் காரின் பின்புறத்தில் இடித்ததில் இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் நேற்றைய தினம் மெட்ரோ ஆய்வு பணிகளை செய்திருந்தார். அவர் கத்திப்பாரா மெட்ரோ பணிகளை ஆய்வு செய்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயங்களும் இல்லை.
முதல்வர் விஜய்யின் கான்வாய் வாகனம் எனச் சொல்லப்படும் அணிவகுப்பு வாகனங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முதல்வர் விஜய் பயணிக்கும் வாகன சில்வர் நிறத்தில் உள்ள சொகுசு கார் என சொல்லப்படுகிறது. இதில் தேசியக் கொடி, தமிழக அரசின் முத்திரை, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருக்கும்.
முதல்வருக்கு இசட்+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பயணிக்கும் வாகனங்களுடன் புல்லட் ப்ரூஃப் கொண்ட வாகனங்களும் அணிவகுத்து செல்லும். பாதுகாப்பு படை வீரர்கள் நின்று செல்லும் வகையில் கார்களில் ஃபூட் ரெஸ்ட் இருக்கும். கான்வாயின் முன் பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வாகனங்களும் செல்லும்.


Click it and Unblock the Notifications
