பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்! வெற்றித்தறின்னு பேரு வச்சிட்டு கோ-ஆப்டெக்ஸை இழுத்து மூடிய விஜய்
சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக 90 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்), தற்போது புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தன்னை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மறுபுறம் விற்பனை சரிவைக் காரணம் காட்டி பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் 10 விற்பனை நிலையங்களை மூட அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இளைய தலைமுறையை ஈர்க்கும் 'வெற்றித்தறி' உருமாற்றம்
பாரம்பரிய கைத்தறி பிராண்டான கோ-ஆப்டெக்ஸை 'ஜென்-ஜி' (Gen Z) தலைமுறைக்கு ஏற்ப மாற்றும் நோக்கில், 'வெற்றித்தறி' என்ற புதிய விற்பனை மாதிரியை கைத்தறித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நவீன வடிவமைப்புடன் கூடிய பிரீமியம் ரக ஆடைகள், ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் மற்றும் புதுமையான வீட்டு உபயோக ஜவுளிகள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆறு 'வெற்றித்தறி' விற்பனை நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த உயர்தர வீட்டு ஜவுளி ரகங்களை உள்நாட்டு சந்தைக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ், உடனடி டெலிவரி தளங்களான பிளிங்கிட் மற்றும் இன்ஸ்டாமார்ட் போன்றவற்றுடன் இணைந்து தனது மின்னணு வர்த்தக தடத்தை விரிவாக்கி வருகிறது.
10 விற்பனை நிலையங்களை மூட அரசு முடிவு: ஊழியர் சங்கம் கண்டனம்
ஒருபுறம் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அடுத்தடுத்து மூட கைத்தறித் துறை முடிவு செய்துள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாரதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு 145 விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் விற்பனை குறைவு என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4, ஆந்திராவில் 5 மற்றும் கோவாவில் 1 என மொத்தம் 10 விற்பனை நிலையங்களை மூட அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டால், அங்கு பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் என்னவாகும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும்,என்றார் .
துணிப்பைக்கு பதில் பேப்பர் பேக்கிங்: வாடிக்கையாளர்களை விரட்டும் நடைமுறை
மேலும் பேசிய அவர், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் சமீபகாலமாக முன்னெடுத்து வரும் முரண்பாடான நிர்வாக நடைமுறைகளைச் சுட்டிக்காட்டினார்.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகளுக்குப் பதிலாக, காகிதத்தில் பொதிந்து தரும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாரம்பரிய துணிப்பைகளை தவிர்ப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, அவர்கள் மீண்டும் கடைகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
விற்பனையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, கடைகளை மூடுவதற்கான சூழலை நிர்வாகமே மறைமுகமாக உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய கோரிக்கைகள்
இக்கூட்டத்தில் நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் காக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
ஜிஎஸ்டி விலக்கு: ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி துணிகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி (GST) வரியை மத்திய அரசு உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
நில மீட்பு: ஈரோடு பகுதியில் கைத்தறித் துறைக்குச் சொந்தமான ₹500 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து உடனடியாக மீட்டு துறை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
விற்பனை நிலையங்களை தொடர்ந்து இயக்குதல்: மூட முடிவெடுக்கப்பட்டுள்ள 10 விற்பனை நிலையங்களின் முடிவை கைவிட்டு, ஊழியர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்து விற்பனையை உயர்த்த நவீன யுக்திகளைக் கையாள வேண்டும்.
பாரம்பரிய கைத்தறி அமைப்பான கோ-ஆப்டெக்ஸ், நவீன சந்தை போட்டியை எதிர்கொள்ள புதிய முயற்சிகளை எடுக்கும் அதே வேளையில், தரைமட்டத்தில் உள்ள ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் விற்பனை நிலையங்களின் செயல்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
