கோவை பாரதியார் பல்கலையின் 196 ஏக்கர் நிலம் அரசுக்கு மாற்ற முன்மொழிவு.. மீண்டும் டிஎன் டெக் சிட்டி?

Subscribe to Oneindia Tamil

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான 196.22 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசுக்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. TN Tech City திட்டத்தின் எதிர்காலத்திற்காக நிலம் மாற்றப்படலாம் என்பதால் இது தொடர்பான விவாதங்கள் கோவையில் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'டிஎன் டெக் சிட்டி ' திட்டம் முடங்கியிருந்த நிலையில், இந்த நிலப் பரிமாற்றத்திட்டம் அதிக கவனம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக வெளியான முன்மொழிவின்படி,பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள சுமார் 77 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு மாற்றப்பட உள்ளது. மீதமுள்ள நிலத்தை மாசு ஏற்படுத்தாத தொழில்களை அமைப்பதற்காக TIDCO நிறுவனத்துக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலப் பரிமாற்ற முன்மொழிவு 'டிஎன் டெக் சிட்டி ' திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவில்லை. திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை

Coimbatore 196 22 Acres of Bharathiar University Land to Be Transferred Will TN Tech City Get Land

2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம்

திமுகவின் தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்த காலத்தில், அதாவது 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டில் TN Tech City திட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, ஓசூர் ஆகிய நகரங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மையங்களை உருவாக்குவது தான் 'டிஎன் டெக் சிட்டி ' திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

கோவை மாவட்டத்தில், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் 321.74 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டத்தைச் செயல்படுத்தத அரசு திட்டமிட்டது. தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், ஆராய்ச்சி வசதிகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு வசதிகள் மற்றும் இதர உட்கட்டமைப்புகளுடன் கூடிய தொழில்நுட்ப நகரமாக இந்த பகுதியை மாற்ற அரசு திட்டமிட்டது. இந்ததிட்டத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்துவதற்கான திட்டமிடல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை எல்காட் நிறுவனம் அப்போது மேற்கொண்டது.

சுற்றுச்சூழல் பாதிப்பு வரும் என கடும் எதிர்ப்பு

மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோமையாபாளையம் பகுதியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இயற்கை ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் அரசு திட்டமிட்ட நிலம், வனப்பகுதியின் எல்லைக்கும் பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிராந்திய வளாகங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து இருந்தது. மேலும், தடாகம் மற்றும் போலுவாம்பட்டி பள்ளத்தாக்குகளுக்கு இடையே யானைகள் இடம்பெயரும் நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இது இருந்தது

அதேபோல் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் வரம்புக்குள் இப்பகுதி வருவதாக சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கு இப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் அப்போது வலியுறுத்தினார்கள்.

இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளின் நடமாட்ட வழித்தடங்களுக்கு அருகில் திட்டம் அமைக்கப்படுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2024 ஜூன் மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் அந்தத் தடை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் டிஎன் டெக் சிட்டி திட்டத்துக்கான அசல் மாஸ்டர் பிளான் ஒப்பந்தப்புள்ளியை எல்காட் ரத்து செய்தது. சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தவிர்த்து மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தைப் பரிசீலிக்கலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதற்கிடையே, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சிறிய அளவிலான வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனினும், இந்த மாற்றுத் திட்டத்துக்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட்டதாகவோ, கட்டுமானப் பணிகள் தொடங்கியதாகவோ உறுதியான தகவல்கள் இல்லை.

நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுடன் தொடர்புடைய புதிய முன்மொழிவு

பாரதியார் பல்கலைக்கழகத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டை அதிகரிப்பது தொடர்பான தனியான நடைமுறையின் ஒரு பகுதியாகவே தற்போதைய நிலப் பரிமாற்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டிருக்கிறதாம். நிலத்தை அரசுக்கு மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், இழப்பீட்டுக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் இழப்பீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடனும் இந்த ஏற்பாடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது.

மாசு ஏற்படுத்தாத தொழில்களுக்கு நிலம் ஒதுக்கீடு

டிட்கோ நிறுவனத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பம் சார்ந்த அல்லது உற்பத்தித் தொழில்களை அமைக்கப் பல்கலைக்கழகம் முன்மொழிந்திருக்கிறது. எனினும், அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் தன்மை மற்றும் அளவு ஆகியவை தமிழக அரசின் இறுதி உத்தரவுகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் மற்றும் தேவையான அனுமதிகளைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.

TN Tech City திட்டத்தை மாற்றியமைத்து மீண்டும் செயல்படுத்துவதா, சிறிய அளவிலான தொழில்நுட்ப மையத்தை உருவாக்குவதா அல்லது தனித்த தொழிற்திட்டத்தை முன்னெடுப்பதா என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுகள் எதையும் அரசு வெளியிடவில்லை.இப்போதைக்கு சோமையம்பாளையம் பகுதியில் நிலத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய முன்மொழிவு மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்றும், உண்மையில் TN Tech City திட்டத்தின் எதிர்காலம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருப்பதாகவும் கோவை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+