ரயிலில் சத்தமாக ரீல்ஸ், பாட்டு கேட்காதீங்க! மீறினால் 6 மாதம் சிறை.. 5,000 அபராதம்! தெற்கு ரயில்வே
சென்னை: ரயில்களில் பயணம் செய்யும் போது ஹெட்போன் இல்லாமல் ரீல்ஸ் மற்றும் பாடல்களை பிற பயணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக சத்தமாக கேட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. முதல் முறை தவறு செய்து பிடிபட்டால் ஆயிரம் ரூபாய் அபராதமும் மீண்டும் அதே தவறை செய்தால் 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக சில பயணிகள் தங்கள் செல்போனில் சத்தமாக பாட்டு மற்றும் வீடியோ கேட்பதை பார்க்க முடியும். பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் இடையூறு செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ரயில்களில் வீடியோக்கள், ரீல்ஸ்கள்
இதனால், பயணிகள் தூங்கவிடாமல் அவதிப்படுவதும், தட்டிக்கேட்டால் வாக்குவாதம் ஏற்பட்டு பயணிகளுக்குள் சண்டை ஏற்படுவதையும் இந்திய ரயில்களில் அடிக்கடி காணக்கூடிய ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ரயில்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சத்தமாக பாடல்கள், வீடியோக்கள், ரீல்ஸ்கள் பார்க்கக் கூடாது என்று ரயில்வே அறிவுறுத்தல் விடுத்தாலும் இதை யாரும் காதில் போட்டுக்கொள்வதே இல்லை.
ரயில்வே அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் பெரிதாக கண்டு கொள்வது இல்லாத சூழலே காணப்படுகிறது. இந்த சூழலில்தான் ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் விதமாக பாடல்கள் கேட்டு தொல்லை கொடுக்கும் பயணிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி, இனி ரயில்களில், ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபரதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.5 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை
இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அதிவேக மொபைல் இணைய வசதி பரவலாகக் கிடைப்பதால், ரயில்களில் பயணிகள் பலர் செல்போன்களில் வீடியோக்கள் மற்றும் ஆடியோ பாடல்களை ஸ்பீக்கர் மூலம் அதிக சத்தத்துடன் ஒலிக்கச் செய்வது அதிகரித்துள்ளது. எனவே, இதனை தடுக்க ரயில்வே பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பயணிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பிராந்திய மொழிகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரயில் நிலையங்களில் இதுபற்றி அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ரயில்வே விதிகளை மீறி சத்தமாக பாடல் கேட்டால் ரயில்வே விதிகள் 145 பிரிவு படி, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அல்லது பயண டிக்கெட் ரத்து செய்யப்படும். ரயிலை விட்டு பயணிகள் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த எச்சரிக்கைகளை பயணிகள் கேட்காமல் தொடர்ந்து இடையூறு செய்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இது இரண்டு விதிக்கப்படும்.
விதிமீறல்களை கட்டுப்படுத்த
ரயில்வேயில் செல்போன்களை சத்தமாக பாடல் கேட்டு பிற பயணிகளுக்கு தொந்தரவு செய்வதை தடுக்க ஏற்கனவே விதிகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டு முதல் ரயில்வே இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இருந்தாலும் தற்போது இதுபோன்ற புகார்கள் அதிகரித்து இருப்பதால், விதிமீறல்களை கட்டுப்படுத்தும் விதமாக இத்தகைய அதிரடி நடவடிக்கையை ரயில்வே எடுத்து இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.




Click it and Unblock the Notifications
