கொளத்தூர் எம்எல்ஏ ஸ்டாலின்? இடைத் தேர்தல் வேண்டாம்..2ஆம் இடம் பிடித்தவருக்கு பதவி! வேல்முருகன் ஐடியா
விழுப்புரம்: இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ இரண்டாவது இடத்தைப் பிடித்த கட்சியின் வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுல்லார்.
விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் திருமண மண்டபத்திற்கு வந்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

வேல்முருகன்
செஞ்சியில் காணாமல் போன சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாதது வேதனையளிக்கிறது. போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களும் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இதுவரை முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளை முதலமைச்சர் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு
நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாக தமிழக அரசு செயல்படுகிறது. தனது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரின் செயல்பாடுகளால் விஜய் சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆறு மாத கால ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்தை வழிநடத்த முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபம்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பிய அவர், மதநல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பின்மை
தமிழகத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் தமிழர்கள் அல்லாதவர்கள் அதிகளவில் இருப்பது கவலைக்குரியது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளில் உரிய அக்கறை காட்டப்படவில்லை. தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வது, வேலைவாய்ப்பின்மை, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை, ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
இடைத்தேர்தல்
தமிழக வெற்றிக் கழகத்தை வைகோ ஆதரித்த பிறகு அவரது பேச்சுகளும் செயல்பாடுகளும் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். இருப்பினும், இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்தாலோ அல்லது பதவியை இழந்தாலோ இரண்டாவது இடத்தைப் பிடித்த கட்சியின் வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும்" என்றார்.




Click it and Unblock the Notifications
