ஆறே மாசம், எல்லாமே நாசம்.. வெங்காயம், தக்காளியை கூட வாங்க முடியலை! விட்டு விளாசிய முக ஸ்டாலின்!
சென்னை: வெங்காயம், தக்காளியை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளது தமிழ்நாடு. சாப்பிடாமல் இருந்தால் தான் மயக்கம் வரும் என்றால், இன்றைக்கு அரிசி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது. இதை பற்றி முதலமைச்சர் விஜய் வாயை திறக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. ஆறே மாசம், எல்லாமே நாசம் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஆட்சி இருக்கிறது என முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் பெரியாரின் 'குடி அரசு இதழ் முழுத்தொகுப்பு' வெளியீட்டு விழாவில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். அவருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் நினைவுப் பரிசினை வழங்கினார்.
பின்னர் நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின்," மிசாவில் என்னை போன்றவர் சென்னை சிறைச்சாலையிலே ஓராண்டு இருந்தோம் என்று சொன்னால், ராமகிருஷ்ணன் அவர்கள் கோவை சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். போராட்ட குணம் மாறாமல் இன்று வரை செயல்பட்டு வருகிறார்.

முக ஸ்டாலின்
சில நாட்களுக்கு முன்பு, கீழே விழுந்து காலில் அடிபட்டு இருந்தாலும், விடாப்பிடியாக குடி அரசு இதழ் முழுத்தொகுப்பு வெளியிட்டு விழா நடைபெற்றே ஆக வேண்டும் இருந்து நடத்தி காட்டி உள்ளார். இத்தனை ஆண்டுகாலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி எல்லாம், ஆறே மாதத்தில் பின்னோக்கி போய்கொண்டிருக்கிறது என்பதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், ஆளுங்கட்சியும் பெரியாரை கொள்கை தலைவர் என்று கூறுவதுதான்.
விஜய் அரசு
இந்த ஆட்சிக்கே ஜோசியர்தான் கொள்கை தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். ஒரு விஷயத்தில் கூட இந்த ஆட்சியாளர்களால் உறுதியாக இருக்க முடியவில்லை. அறிவிக்கிறார்கள், ரத்து செய்கிறார்கள். எல்லாவற்றிலும் U-Turn தான். வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களே ஒரு செய்தியை கசிய விடுகிறார்கள், எதிர்ப்பு கிளம்பினால், உண்மை இல்லை என்று மறுக்கிறார்கள். தொழில்துறைக்கு வழிகாட்ட வேண்டிய GUIDANCE TN என்ற அமைப்பு கூட, இன்றைக்கு வழி தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி
இவர்களால் பக்கத்து மாநிலம் எல்லாம் நம்மை Comedian ஆக பார்த்துக்கொண்டிருக்கிறது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் நடுவுலதான் போட்டி என்று முன்பு சொன்னேன். அது இப்போது Upgrade ஆகி, போதைப்பொருளுக்கும், வன்கொடுமைகளுக்கு நடுவுலதான் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது.
காவல்துறை
அதே போல் அதிகாரிகளுக்கு யார் தொல்லை கொடுப்பது என்று அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ-க்களுக்கும் நடுவில் போட்டி உருவாகியுள்ளது. அடுத்து என்ன வரும் என்று தெரியவில்லை. பெண்கள் சுதந்திரமாக நடமாடவில்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் பிடிபடுகிறது. அதனை பிடிப்பதும் மாநில காவல்துறை அல்ல; ஒன்றிய அரசின் துறைகள். குட்கா மாஜிக்களையும், மெத் பூபாலனையும் கட்சியில் வைத்துக்கொண்டிருந்தால், இவர்களால் எப்படி போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியும்?
முதலமைச்சர் விஜய்
வெங்காயம், தக்காளியை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளது தமிழ்நாடு. சாப்பிடாமல் இருந்தால் தான் மயக்கம் வரும் என்றால், இன்றைக்கு அரிசி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது. இதை பற்றி முதலமைச்சர் விஜய் வாயை திறக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. ஆறே மாசம், எல்லாமே நாசம் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஆட்சி இருக்கிறது. தவெக என்ற கட்சி அரசியல் பிணி மட்டுமல்ல; அது ஒரு சமூக பிணி. அதை எதிர்த்து நாங்கள் போராடுவது போல், அனைவரும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
கருணாநிதி
கல்விக்கான அடித்தளத்தை அமைத்து தந்தது தந்தை பெரியார்தான். அதனால் தான் ஒர் இதழ் அன்று, 'காரியம் காமராஜர், ஆனால் காரணம் தந்தை பெரியார்' என்று குறிப்பிட்டு இருந்தது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கான கட்டமைப்பை உருவாக்கியது காமராஜர் என்றால், உயர்கல்விக்கான கட்டமைப்பை உருவாக்கியது முத்துவேலர் கருணாநிதி அவர்கள். பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் என உருவாக்கியவர் கலைஞர் அவர்கள்." என்றார்.




Click it and Unblock the Notifications
