‘கல்யாண ராணி’ கார்த்திகா.. 2 மாத இடைவெளியில் 2 பேரை திருமணம் செய்துவிட்டு மோசடி! பதறிய கோவில்பட்டி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனது சொந்த ஊர் எனக் கூறிக்கொண்ட பெண் ஒருவர், 2 மாத இடைவெளியில் 2 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு கம்பி நீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த கார்த்திகா (23) என்ற பெண்ணுக்கும், தஞ்சாவூர் அருகே உப்புண்டார்பட்டியை சேர்ந்த சித்தார்த்தன் (36) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தஞ்சாவூரில் திருமணம் நடந்தது. இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம், மணப்பெண் வீட்டுக்கு 3 சவரன் தங்க நகை வழங்கப்பட்டு, சுமார் ரூ.15 லட்சம் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த 2-வது நாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கார்த்திகா கோவில்பட்டி சென்றுள்ளார். தீபாவளிக்கும் கணவரின் ஊரான தஞ்சாவூர் செல்லாததால் பொறுமை இழந்த சித்தார்த்தன் நேற்று தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் உள்ள கார்த்திகா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு கார்த்திகா இல்லை. அவரது பெற்றோர் எனக் கூறிய மாரியப்பன், முனீஸ்வரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நாமக்கல்லை சேர்ந்த ரஞ்சித்குமார் (37) அங்கு வந்து, தன் மனைவி கார்த்திகா எங்கே என கேட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 1 ஆம் தேதி தனக்கும் கார்த்திகாவுக்கும் கோவிலில் திருமணம் நடந்ததாக அவர் கூறியதை கேட்டு சித்தார்த்தன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் இருவரையும் அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.
கார்த்திகாவின் பெற்றோர் என கூறப்பட்ட முனீஸ்வரி மற்றும் மாரியப்பனிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். கார்த்திகா, முனீஸ்வரியின் அக்கா மகள் என்றும், தற்போது மலேசியாவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால், முனீஸ்வரி, மாரியப்பன் இருவரும் திருமண புரோக்கர்கள் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீசில் சித்தார்த்தன், ரஞ்சித்குமார் புகார் அளித்தனர். அவர்கள் இருவரும் அளித்த புகாரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கார்த்திகா, மாரியப்பன், முனீஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கும்பல் வேறு யாரையும் ஏமாற்றியதா என விசாரணை நடந்து வருகிறது. மதுரையை சேர்ந்த ஒருவரை கார்த்திகா திருமணம் செய்ய முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.


Click it and Unblock the Notifications
