‘டேஞ்சர்’ கும்மிடிப்பூண்டி.. டெல்லியை பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியது!
சென்னை: சென்னையை அடுத்து அமைந்துள்ள தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில், கடந்த 3 நாட்களாகக் காற்றுத் தரம் மிக மோசமடைந்து மிக அதிகபட்ச காற்று மாசு குறியீட்டைப் (AQI) பதிவு செய்துள்ளது. டெல்லியை விட கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தொழிற்சாலைகளில் இருந்து, வெளியேறும் புகை, வாகனப்புகை உட்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்போருக்கு, நுரையீரல், சுவாச பிரச்சனை என பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது.

காற்று மாசு அளவை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கணக்கிட்டு அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். காற்று மாசுபாடு தரக்குறியீடு 0-50 என்ற அளவில் இருப்பது, பிரச்சனை இல்லை என்பதை குறிக்கும்.
காற்று மாசு தரக்குறியீடு, 50 முதல் 100 வரை இருப்பது திருப்திகரமானது. 101 முதல் 200 வரை மிதமானது. 201 முதல் 300 வரை இருந்தால் மோசமானது. 301 முதல் 400 வரை மிக மோசமானது என காற்று மாசு அளவீடு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்துள்ள பகுதியான, கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக் குறியீடு மிக மோசமானதாக பதிவாகியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு குறியீடு தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதியன்று 305 ஆக இருந்த காற்று மாசு குறியீடு, அடுத்த நாளான நவம்பர் 20 அன்று 321 ஆக உயர்ந்து, சனிக்கிழமை நேற்று (நவம்பர் 21) 342 என்ற நிலையை எட்டியது. நேற்று மாலை 5.05 மணியளவில் 346 ஆக உயர்ந்தது.
நேற்று கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு குறியீடு 342 ஆகப் பதிவான இதே காலகட்டத்தில் டெல்லியில் பதிவான காற்று மாசு குறியீடு 265. அதே நேரத்தில் சென்னையின் காற்று மாசு குறியீடு 224 ஆக இருந்தது.
டெல்லியின் காற்று மாசு அளவை விடவும் கும்மிடிப்பூண்டியின் மாசு அளவு அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, சரக்குப் போக்குவரத்து வாகனப் புகை உள்ளிட்டவை கும்மிடிப்பூண்டியில் ஏற்படும் மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
