முதலீடுகளை குவிக்கும் ஆந்திராவின் சீக்ரெட் இதுதானா? திருப்பதி டூ விசாகப்பட்டினம்.. ஹாட்ஸ்பாட்கள்
விசாகப்பட்டினம்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கும் ஆந்திராவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, இங்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தொழில் முதலீடுகளை பெறுவதற்கு உடனடியாக முதலீட்டாளர்களுக்கு பதில் கொடுப்பது, விரைவாக முடிவெடுத்தல் உள்ளிட்டவையே காரணம் என்று அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷும் கூறியிருந்தார்.
ஆந்திராவை பொறுத்தவரை தனது மாநிலத்தில் மூன்று முக்கிய மண்டலங்களாக பிரித்து முதலீடுகளை ஈர்த்து வர திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கான பிராந்திய வளர்ச்சித் திட்டத்தின்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் ஆந்திராவின் முக்கிய தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வருகிறது. கூகுள் நிறுவனத்தின் ஏஐ மையம், ஏர்டிரங்க் - ஜேசிகே இன்ஃப்ரா நிறுவனத்தின் டேட்டா சென்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெரிய முதலீடுகள் இங்கேதான் அமைகின்றன. இதோடு சேர்த்து, விசாகப்பட்டினம் பே டெக் சிட்டி திட்டமும் செயல்படுத்த ஆந்திரா திட்டமிட்டுள்ளது.
அதேபோல, விசாகப்பட்டினத்தை ஒட்டிய அனகாப்பள்ளி மற்றும் காக்கிநாடா பகுதிகளில் எஃகு ஆலைகள் அமைப்பதற்குப் பெருமளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனங்கள் இங்கே வரவுள்ளன. மருந்து உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில் விரிவாக்கத்துக்கும் இப்பகுதியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
போகாபுரத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கான முதலீடுகளுக்கு தீவிரம் காட்டப்படுகிறது. காக்கிநாடா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் துறைமுகங்களை மையமாகக் கொண்ட தொழில் வழித்தடங்களை உருவாக்குவதற்கும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமராவதி பொருளாதார மண்டலம்
அமராவதி தலைநகர் பகுதியில் சுமார் ரூ.66,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்வட்ட மற்றும் வெளிவட்டச் சாலைகள், ரயில் பாதைகள், புதிய சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
50 ஏக்கர் பரப்பளவில் குவாண்டம் வேலி (சிலிகான் வேலி போல) உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், டீப் தொழில்நுட்ப உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 90 லட்சம் சதுர அடி பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. துறைமுகம் சார்ந்த முதலீடு திட்டங்களுக்கு மச்சிலிப்பட்டினம் பகுதியில் கவனம் செலுத்தப்படுகிறது.
மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமாயப்பட்டினம் துறைமுகங்களுக்காக சுற்றியுள்ள மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனுடன் பல்நாடு மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி தொழில் மையமும் அமைகிறது.
திருப்பதி பொருளாதார மண்டலம்
ஆந்திரப் பிரதேசத்தின் தூய்மையான எரிசக்தி திட்டங்களில் திருப்பதி மண்டலம் பெரும் பங்களிப்பை அளிக்க உள்ளது. இந்த பகுதியில், பசுமை எரிசக்தித் திட்டங்களுக்காக சுமார் ரூ.5.70 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீசிட்டி, கொப்பார்த், ஓர்வாகல் மற்றும் லெபக்ஷி ஆகிய பகுதிகளில் தொழில் மையங்களில் செமி கண்டக்டர்கள், பேட்டரிகள், மின்சார வாகனங்கள், பாதுகாப்பு, ஏரோ ஸ்பேஸ் போன்ற துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன.
இப்படி மண்டல வாரியாக பிரித்து ஆந்திரா அரசு முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தின் ஒருங்கிணைந்த பரவலான வளர்ச்சிக்கு தீவிரம் காட்டி வருகிறது. இதுபோன்ற காரணங்களே அந்த மாநிலம் தொழில் முதலீட்டாளர்களை அதிகம் ஈர்ப்பதற்கு காரனம் என்றும் பேசப்படுகிறது.





Click it and Unblock the Notifications
