இதுதான் "அந்த" ரகசியம்.. தமிழக முதலீட்டு சீக்ரெட் கசிந்த சர்ச்சை! ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நக்கல்
சென்னை: தமிழ்நாட்டின் முதலீட்டு அமைப்பான கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் முதலீட்டு திட்டங்கள் கசிந்து, அவை ஆந்திர பிரதேசத்துக்கு சென்றதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நக்கலாக ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். முதலீட்டாளர்களுக்காக அதே நாளில் பதில் அளிப்பதுதான் தங்கள் ரகசிய முதலீட்டு உத்தி என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு, ஆந்திரா இடையே முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு மாநிலங்களும் சர்வதேச நிறுவனங்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை சொல்லி தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய அழைத்து வருகிறது.

திடீர் சர்ச்சை
இதில் தமிழ்நாட்டின் முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய அமைப்பாக Guidance Tamil Nadu இருக்கிறது. இதற்கிடையே இந்த அமைப்பில் பணியாற்றிய சுமார் 15 அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் அந்த அமைப்பை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான அரசு அமைந்த இரண்டே மாதங்களில் இவர்கள் விலகியுள்ளனர்.
அதில் மூன்று முன்னாள் ஊழியர்கள், ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களை கவுரவித்திருந்தார். இதற்கிடையே சமீப காலமாகவே தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் ஆந்திராவுக்கு அதிகம் செல்வதாகவும் அதற்கு தமிழ்நாட்டுக்கு வரவிருந்த முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான ரகசிய தகவல்களை இவர்கள் பகிர்ந்ததே காரணம் என சொல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக மாறியது.
டாப் சீக்ரெட்
இந்த சூழலில் தான் ஆந்திர பிரதேசத்தின் ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சரான நாரா லோகேஷ் இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், "பிரேக்கிங்: ஆந்திர பிரதேசத்தின் டாப் சீக்ரெட் முதலீட்டு திட்டம் லீக் ஆகிவிட்டது. முதலீட்டாளர்களுக்கு உடனடியாக பதில் அளிப்பதுதான் அது. இதை நீங்கள் தாராளமாகப் பின்பற்றலாம்" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு 'Speed of Doing Business' என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
அதாவது முதலீடு தொடர்பாக தொடர்பு கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆந்திரா உடனடியாக பதிலளிக்கிறது என்றும் அதுவே முதலீடுகளை ஈர்க்கும் யுக்தி எனவும் அவர் பதிவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு தரப்பில் இருந்து பதில் வர லேட் ஆவதே முதலீடுகள் தள்ளி போக காரணம் என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவரது இந்த ட்வீட் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
என்ன நடந்தது!
இதற்கிடையே 15 ஊழியர்கள் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் இருந்து வெளியேறியது தொடர்பாகவும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஊழியர்கள் முக்கியமான முதலீட்டு தகவல்களை கசியவிட்டது விசாரணையில் தெரியவந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்தே அவர்கள் ராஜினாமா செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
மறுப்பு
ஆனால், முன்னாள் ஊழியர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தாங்கள் எந்த ரகசியத் தகவலையும் கசியவிடவில்லை என்றும், தங்களைப் பணிநீக்கம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். கைடன்ஸ் அமைப்பில் நிலவிய பணிச்சூழல் மோசமாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே ஜூலை மாதமே தாங்களாகவே வேலையை விட்டு வெளியேறியதாக அதில் இருந்து வெளியேறிய ஊழியர்கள் கூறியதாக தி சவுத் ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
