அண்ணாமலை மாதிரி பிழைப்பு இல்லாமல் கட்சி ஆரம்பிக்கவில்லை.. விளாசிய மாணிக்கம் தாகூர்
மதுரை: அண்ணாமலையை போன்று பிழைப்பில்லாமல் நான் புதிய கட்சி தொடங்கவில்லை என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மரணம் அடையும் வரை நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்றும் கூட்டணி என்ற முறையில் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். முன்னதாக தவெகவில் மாணிக்கம் தாகூர் இணைந்து விடலாம் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை மாதிரி பிழைப்பு இல்லாமல்
திருப்பரங்குன்றம் தீபம் வருடம் தோறும் ஏற்றப்படுகிறது. அண்ணாமலையின் முகமூடி கிழிந்துவிட்டது. அண்ணாமலை மாதிரி பிழைப்பு இல்லாமல் இன்னொரு கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சீன் போட்டுக்கொண்டு இருக்கவில்லை. திமுகவிடம் சைடில் டீலிங்க் போட்டுக்கொண்டு நான் பிழைப்பு நடத்தவில்லை. நான் மானத்தோடு வாழ்கிறவன். தவெக எங்களுடைய கூட்டணி கட்சி.
அவர்களுடன் நாங்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கிறோம். எந்த முடிவாக இருந்தாலும் இந்த அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு கொடுப்பது தமிழக காங்கிரஸ் என்ற முறையில் எனது கடமை. அண்ணாமலை சொல்லும் நிலைப்பாட்டில் விஜய் நிற்க முடியாது. அண்ணாமலை என்னை பற்றி பேச தகுதி இல்லை. நான் பல கட்சி பரந்தாமன் இல்லை. நான் பிறந்ததும் காங்கிரஸ் கட்சியில்தான். சாகப்போறதும் காங்கிரஸ் கட்சியில்தான்" என்றார்.
உச்சி பிள்ளையார் கோவிலில்தான் தீபம்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது:- எங்கே குற்றம் நடைபெற்று இருந்தாலும் சரியாக நடவடிக்கையை எடுப்பார். தமிழக அரசின் சார்பாக சட்டத்துறை அமைச்சர், எந்த புகாரும் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார். பாஜகவில் முன்பு இருந்தவர்கள் எல்லாரும் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்.
முன்பு பாஜகவை சேர்ந்த ஒரு மேடம் பொதுக்கூட்டத்தில் நின்று தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். எந்த ஒரு புகாரும் இல்லாமல் நீங்களாக ஒரு விஷயத்தை கிளப்புகிறீர்கள். புகார் இல்லை என்று சட்ட அமைச்சர் சொல்லிவிட்டார். திருப்பி கிளப்பிவிட்டு எல்லா இடத்திலும் அதையே பேசுகிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அந்த ஊர்முறைப்படி, உச்சி பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றுகிறார்கள்.
ஆளுக்கு ஆள் கல்லை வைத்துக்கொண்டு
300 வருடமாக அதுதான் நடக்கிறது. ஆளுக்கொரு ஆள் தனித்தனியாக கல்லை வைத்துக்கொண்டு அங்கேயும் ஏற்ற வேண்டும், இங்கேயும் ஏற்ற வேண்டும்.. விட்டால் ஏர்போர்ட் முன்னால் ஒரு கல்லை வைத்துவிட்டு இங்கேயும் ஏற்றவேண்டும் என்று சொல்வார்கள் போல் தெரிகிறது. வட இந்தியாவில் ராமரை வைத்து பாஜக எப்படி அரசியல் செய்து கொண்டு இருக்கிறதோ, பிழைப்பு இல்லாமல் மக்களிடம் வெறுப்பை உமிழ்வதற்காக பாஜகவும் இந்து முன்னணியும் முருகனை இழுத்துக்கொண்டு வருகிறார்கள்.
முருகனை இழுத்து வர முடியாது. முருகன் இந்த அரசியலுக்கு அப்பாற்பட்டவர். தமிழ்க்கடவுள் முருகன். எனவே, இந்த அரசியல் தேவையில்லாத அரசியல். பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் செய்யும் அரசியலுக்குள் நாங்கள் விழ மாட்டோம்." என்றார்.
ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேருங்கள்
முன்னதாக வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, மாணிக்கம் தாகூரை கடுமையாக விமர்சித்து இருந்தார். அண்ணாமலை கூறும் போது, "மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட வேண்டும். அது அவருக்கும் நல்லது. காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது.
ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு அந்த கட்சியின் மாநில தலைவராக பேசிக்கொண்டு இருக்கும் மாணிக்கம் தாகூர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதுவுமே நடக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விலைவாசி உயர்வு இல்லை என்று பேசி வருகிறார்" என்று காட்டமாக பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தற்போது பேசியுள்ளார்.




Click it and Unblock the Notifications
