வேலுமணி யார் தெரியுமா.. முதல் ஆளாக குரல் கொடுத்த செங்கோட்டையன்.. பாவம் எடப்பாடி பழனிசாமி
கோவை: தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக அடுத்தடுத்து தோல்விகளால் அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி, வேலுமணி இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. இந்நிலையில் வேலுமணியை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "உன்னால் ஞானத்தை எதிர்த்து போரிட முடியும். ஆனால் காலத்தை எதிர்த்து ஒருபோதும் போரிட முடியாது. காலம் வைக்கிற புள்ளியை அழிக்க முடியாது. இதுதான் எடப்பாடியின் சூழ்நிலைக்கு பொருத்தமான கருத்து. அதிகாரத்தை பயன்படுத்துவதால் அதிமுகவில் ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள்.

யார் ஜாக்பாட்டில் வந்தது
எந்த ஒரு கட்சித் தலைமைக்கும் மன்னிக்கும் குணம், பெருந்தன்மை அவசியம். அது இல்லாத தலைமை நீடித்து நிலைத்த வரலாறு எங்கும் இல்லை. எடப்பாடி பழனிசாமி விஷயத்திலும் அதே வரலாறு பதிவாகும். பொள்ளாச்சியில் உறவினர் திருமணத்திற்காக சென்றிருந்தேன். அதற்கு எஸ்.பி வேலுமணியும் வந்திருந்தார். தவெக நிர்வாகிகளும் வந்திருந்தனர். அனைவரும் அருகில் அமர்ந்திருந்தோம். பரஸ்பரம் வணக்கம் செலுத்திவிட்டு சாதரணமாக பேசி கொண்டிருந்தோம்.
நானும், வேலுமணியும் அரசியல் பேசவில்லை. ஜாக்பாட் அடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். உண்மையில் ஜாக்பாட் அடித்தவர் யார். அதில் தோல்வியடைந்தவர் யார். இந்த கேள்விகளுக்கான பதிலை நாடே அறியும் . திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி ஜாக்பாட் அடிக்க பார்த்தார். ஆனால் அவரின் முகத்திரை கிழிக்கப்பட்டது. அதனால் அந்தத் திட்டமும் தோல்வியடைந்ததும் சமகால வரலாறு.
அதிமுக எங்கே
எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்து எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார். அதன் தொடர்ச்சியாக தான் அனிருத் திருமணத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினியுடன் பேசியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் உருவாகி வந்த இயக்கம் இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். கட்சியில் நூற்றுக்கணக்கானோரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என எடப்பாடி சொல்கிறார்.
ஆனால் அவர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளால் உருவாக்கப்பட்ட பொதுச் செயலாளர் என்பதை மறந்து விடுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைவர்கள் வேறு. எடப்பாடி பழனிசாமி வேறு. முதலில் அவர் இதை அவர் புரிந்து கொண்டால் சரி. அதிமுகவில் 2 கோடி தொண்டர்களில் ஒருவர் தான் வேலுமணி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2 கோடி தொண்டர்களில், முக்கிய பொறுப்பாளர் வேலுமணி. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் அவர் உறுதுணையாக இருந்தார்.
காலம் பதில் சொல்லும்
காலம் அவருக்கு உரிய பதில் சொல்லும். யாரையும், யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. கொங்கு மண்டலம் இப்போது தவெக தலைமையில் இருக்கிறது. தனித்து போட்டியிட்டு இந்த மண்டலத்தில் 25 தொகுதிகளை பெற்ற பெருமை எங்களுக்கு இருக்கிறது. கொங்கு மண்டலம் இனி எதிர்காலத்தில் வெற்றி தளபதி தலைமையில் தான் பவனி வரும். எடப்பாடி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தேடி பார்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
