உச்சக்கட்ட அதிர்ச்சியில் மோடி- யோகி.. கைக்கு போன டேட்டா.. சிட்டிங் எம்எல்ஏக்களே படுதோல்வி?
டெல்லி: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டு வரும் நிலையில், 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான தொகுதி வாரியான ஆய்வு முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் அங்கு தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே சமீபத்தில் 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான டேட்டா முதல்வர் யோகிக்கு சென்ற நிலையில், அது அவருக்கு பெரும் தலைவலியை கொடுப்பதாக மாறியுள்ளது.

பாஜகவுக்கு பின்னடைவு
இப்போது உபி சட்டசபையில் 256 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை அப்படியே சட்டசபை தொகுதிகளுக்கு ஒப்பிட்டு பார்த்தால் பாஜக வெறும் 156 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெறும். மீதமுள்ள 99 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த ஆய்வில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்களின் தொகுதிகளிலும் பாஜகவால் முன்னிலை பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் பல சிட்டிங் எம்எல்ஏக்கள் அவ்வளவு ஏன் அமைச்சர்களையும் கூட கழற்றிவிட தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
அகிலேஷ்- காங்கிரஸ்
மறுபுறம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 2024ல் குறிப்பிடத்தக்க முன்னிலையை பெற்றிருந்தது. அக்கட்சியின் சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்ள 100 சட்டசபை தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றது. வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே பின்னடைவைச் சந்தித்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் கடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி உத்தர பிரதேசத்தின் 220க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இது பாஜகவுக்கு முக்கியமான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
பாஜக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பின்னடைவு தான். அப்னா தளம் (எஸ்) கட்சியின் 6 எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளிலும் பின்னடைவு தான். சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, நிஷாத் கட்சி என அனைவருக்குமே பின்னடைவு தான்.
என்ன நிலைமை?
2024 லோக்சபா தேர்தலை பொறுத்தவரை உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்தியா கூட்டணி மொத்தம் 43 தொகுதிகளை பெற்றது. பாஜகவுக்கு 33 இடங்களே கிடைத்தன. பாஜக கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
இந்த சூழலில் தான் உத்தர பிரதேசத்தில் தற்போது பதவியில் இருக்கும் பாஜக எம்எல்ஏக்களில் பலர் இந்த தேர்தலில் தோல்வியை சந்திக்கக்கூடும் என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளது. இதனால் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களில் 40 சதவீதம் பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
பாஜக தலைவர்
இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, உத்தரப் பிரதேச பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சௌத்ரி, "பாஜக என்பது ஒரு குடும்பத்துக்கோ, ஒரு நபருக்கோ அல்லது ஒரு தம்பதிக்கோ சொந்தமான கட்சி அல்ல. எல்லா முடிவுகளும் கூட்டாகவே எடுக்கப்படுகின்றன. மாவட்ட தலைவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. அனைவரிடமும் கருத்து கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்" என்றார். அதாவது சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்ற தகவலை அவர் மறுக்கவில்லை. பாஜகவின் வெற்றியே முக்கியம் எனவும் அதற்கேற்ப வேட்பாளர் தேர்வு இருக்கும் என்ரே பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன?
சுருக்கமாக சொன்னால் இப்போது உபியில் பாஜக சிக்கலான ஒரு சூழலிலேயே இருக்கிறது. பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. இருப்பினும், பாஜகவின் தேர்தல் இயந்திரத்தை வீழ்த்துவது ரொம்பவே கடினம். அதை அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணியால் செய்து காட்ட முடிகிறதா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகும்!


Click it and Unblock the Notifications
