தமிழ்நாடு எங்கே போகிறது? நாகர்கோவில் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கேட்கவே குலை நடுங்குதே!
சென்னை: அமைதிப் பூங்கா என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டில், சமீபகாலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் கொடூரச் சம்பவங்கள் ஒட்டுமொத்த மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ரயில் நிலையங்கள், பள்ளிகள், ஏன் சொந்த வீடுகளில் கூடப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறதோ என்ற கேள்வி சாமானிய மக்கள் மனதில் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இப்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், அடுத்தடுத்து வெளிவரும் குற்றச் சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்த விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

நாகர்கோவில் ரயில் பெட்டியில் நடந்த கொடூரம்
நாகர்கோவில் ரயில் நிலையத்தின் 13-வது யார்டில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், கடந்த நவம்பர் 18-ம் தேதி சுமார் 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, விலா எலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் முறிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரைச் சேர்ந்த அய்யப்பன் (31) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நவம்பர் 14-ம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் 5-வது நடைமேடை அருகே நடந்து சென்ற அப்பெண்ணை, மாற்றுத்திறனாளிகளுக்கான காலியான ரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை அய்யப்பன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கில் இப்போது முக்கியத் திருப்பமாக, கொல்லப்பட்ட பெண்ணின் விரலில் இருந்த பாம்பு வடிவத் தங்க மோதிரத்தின் ஹால்மார்க் முத்திரையை வைத்து போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். குஜராத் மற்றும் சத்தீஸ்கர் நகைக்கடைகள் வழியாக விசாரணையை நகர்த்தியதில், அப்பெண் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 3 மாதங்களாகச் சொந்த ஊரிலிருந்து காணாமல் போனவர் என்பதும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் ரயில் நிலைய வளாகத்திற்குள்ளேயே இப்படியொரு கொடூரம் நடந்து, 4 நாட்களாக யார் கண்ணிலும் படாமல் கிடந்தது ரயில்வே மற்றும் காவல்துறைப் பாதுகாப்பில் உள்ள மிகப்பெரிய ஓட்டையை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை உலுக்கும் சமீபத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள்
நாகர்கோவில் சம்பவம் மட்டுமல்ல, கடந்த சில வாரங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ள அடுத்தடுத்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன:
41 நாட்களாகியும் கிடைக்காத விடை - செஞ்சி சிறுமி ஹேமலதா மாயம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி ஹேமலதா கடந்த அக்டோபர் 12-ம் தேதி திடீரென மாயமானார். 41 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், "என் மகளை யார் கடத்தியிருந்தாலும் தயவுசெய்து கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள், காலில் விழுந்து கெஞ்சுகிறேன்" என அச்சிறுமியின் தாய் கதறி அழும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்குகிறது.
ராமேஸ்வரத்தில் பச்சிளம் பெண் குழந்தை புதைக்கப்பட்ட கொடூரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே சம்பை கிராமத்தில், குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையைப் பெற்ற தந்தை மற்றும் உறவினர்களே வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்த சம்பவம் நவம்பர் 19-ம் தேதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாகக் குழந்தையின் தந்தை, தாத்தா, அத்தை ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூரில் 3 வயது சிறுவனைக் கட்டிவைத்துத் தாக்கிய கொடுமை
பெற்றோர்கள் நம்பி அனுப்பும் பள்ளிகளிலும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைக் காட்டும் விதமாக, திருவாரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுவனை ஆசிரியர் கட்டிவைத்துத் தாக்கிய வீடியோ வெளியாகிப் பெற்றோர்களைப் பதற வைத்துள்ளது.
கீழக்கரையில் வீடு புகுந்து அத்துமீறல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்ற இளைஞரை, ஆத்திரமடைந்த பொதுமக்கள் கட்டிவைத்துத் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவமும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதெல்லாம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமே. தீபாவளி தினத்தன்று 10+ கொலைகள், போலீஸ் அதிகாரி கொலை என்று ஆண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகம் நடந்துள்ளன.
அரசியல் மோதலும் மக்களின் எதிர்பார்ப்பும்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. "கடந்த ஆட்சியில் குற்றங்கள் நடந்தன என்று ஒப்பிட்டுப் பேசுவதை விட்டுவிட்டு, இப்போது நடக்கும் குற்றங்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது?" என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. மறுபுறம், குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். இரவு நேரங்களில் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் பெண்கள் அச்சமின்றி நடமாட முடியுமா? வீட்டில் தூங்கும் குழந்தைகள் பத்திரமாக இருப்பார்களா? குற்றவாளிகளுக்குக் காவல்துறை மீது பயம் வருவது எப்போது? இந்தக் கேள்விகளுக்குத் தமிழக அரசும் காவல்துறையும் செயல் மூலம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications
