திருப்பரங்குன்றத்தில் தீபம்! புதிய வழியில் உச்சநீதிமன்றத்தை அணுகும் தமிழக அரசு! சாதகமாக அமையுமா?
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது, இந்து அமைப்பு கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு தற்போது சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. சீராய்வு மனு விசாரணைக்கு வர தாமதமாக வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கையில் தமிழக அரசின் சட்ட போராட்டம் எந்த அளவுக்கு அரசுக்கு வெற்றியை தரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பொதுவாக இடைக்கால உத்தரவுக்கு எதிராக, 4 வழிமுறைகளில் நம்மால் மேல்முறையீடு செய்ய முடியும். முதல் வழிமுறை, உத்தரவில் மாற்றம் கோரும் மனு. அதாவது, இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அல்லது உத்தரவுகளை மாற்றி அமைக்க கோரி தாக்கல் செய்யப்படும் மனுவாகும்.

இரண்டாவது, உத்தரவை ரத்து செய்ய கோரும் மனு. 3வது உத்தரவில் உள்ள முரண்பாடுகள் குறித்து விளக்கம் கோரும் மனு. 4வது உத்தரவை திரும்ப கோரும் மனு. இதில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய கோரும் மனுவை தாக்கல் செய்யப்படும் போதுதான் சாதகமான தீர்ப்பு வர வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், இரு தரப்பு வாதங்களை கேட்காமல்.. ஒருதரப்பு வாதங்களை மட்டும் கேட்டு அவசரமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மட்டும்தான், இது போன்ற உத்தரவை ரத்து செய்ய கோரும் மனுவை தாக்கல் செய்ய முடியும். திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, அதன் பின்னர் தான் இடைக்கால உத்தரவை கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கையில் உத்தரவை ரத்து செய்யும் மனுவை நம்மால் தாக்கல் செய்ய முடியாது.
எனவேதான் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. பிரச்சனை என்னவெனில் இந்த சீராய்வு மனு உடனடியாக விசாரணைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல, மற்றொரு விஷயம்.. சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டுமே காரணமாக கூறி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நம்மால் புறக்கணித்து விட முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தை கூறி அரசு தன்னிச்சையாக உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது. அப்படி செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக மாறும்.
இப்பொழுது தமிழக அரசுக்கு இருக்கும் வாய்ப்பு.. நாளை அதாவது நவம்பர் 23ஆம் தேதி, நீதிமன்றத்தில் அவசர முறையீடாக முன்வைத்து இந்த வழக்கில் இடைக்கால தடையை பெற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அரசு தரப்புக்கு வெற்றி கிடைக்கும்.
உச்சநீதிமன்ற விதிகளின்படி, சீராய்வு மனுக்கள் வழக்கமாக திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல்.. நீதிபதிகளின் அறைக்குள்ளேயே கோப்புகளின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும். மிக வெளிப்படையான சட்டப் பிழை இருந்தால் மட்டுமே இது ஏற்கப்படும். மேலும் நவம்பர் 24ஆம் தேதிக்குள் இதனை அவசர வழக்காக விசாரணைக்கு கொண்டு வருவது கடினம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
