மதுரை செக்கானூரணி டிரைவர் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் புகைப்பட ஆதாரம் எங்கே? கனிமொழி
மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் டிரைவர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்காக புகைப்பட ஆதாரங்கள் எங்கே என திமுக எம்பியும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நவம்பர் 4-ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள்
பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?
தந்தையை இழந்து தவிக்கும் இரு குழந்தைகள்
இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கனிமொழி ஆறுதல்
அண்மையில் கனிமொழி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் தெரிவித்திருந்தார். இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சியில் "சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்று கூச்சலிட்ட முதலமைச்சர் விஜய், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?
பாரபட்சமற்ற விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செக்கானூரணி காவல் நிலையம்
மதுரை அருகே செக்கானூரணி காவல் நிலையத்தில் ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சொல்ப்படுகிறது. ஆனால் இதை அவரது மனைவி மறுத்துள்ளார். தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் 5 இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
