கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு.. தவெக MLA ஆபாச மெசேஜ்! போலீஸ் நடவடிக்கை இல்லை! நீதிபதி கடும் விமர்சனம்
மதுரை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி பொதுமேடையில் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியலிலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர்கள் மறுப்பும் கூட்டணித் தலைவர்களின் பேச்சும்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் கடந்த சில வாரங்களாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் எந்தவொரு ஆபாச குறுஞ்செய்தியையும் அனுப்பவே இல்லை.. இது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பரப்பும் வதந்தி எனத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். எம்எல்ஏ அருள் விக்னேஷும் கூறி இருந்தார்.
இன்னொரு பக்கம், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் மாணிக்கம் தாகூர், எந்த ஆதாரமும் இல்லாமல் எம்.எல்.ஏ மீது குற்றம் சுமத்துவதாகக் கூறி, அருள் விக்னேஷ் பாவம் என அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இதனால், இந்த விவகாரம் வெறும் அரசியல் சர்ச்சையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது.
மதுரை நிகழ்ச்சியில் நீதிபதி விக்டோரியா கௌரி வேதனை
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் POSH குழு சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 5-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நீதிபதி விக்டோரியா கௌரி மாணவிகள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய அவர், சாதாரணப் பணியாளர்கள் முதல் உயர்பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.. இந்த விவகாரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் ஏன் இதில் இதுவரை நடவடிக்கை இல்லை. அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா? இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.
அப்படி இருந்தும் கூட நடவடிக்கை இல்லை. இன்று வரை மாநில அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரணப் பெண்களின் நிலை என்ன? இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா?, என்று நீதிபதி விக்டோரியா கௌரி வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
வழக்கின் போக்கை மாற்றிய நீதிபதியின் கருத்து
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே பொதுமேடையில், மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்திருப்பதையும், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பது இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு டிஜிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதிமுக சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, மின்னணு ஆதாரங்களைப் பாதுகாக்கவும், எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை நாட்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஆளும் தரப்பு கூறி வந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்தப் பேச்சு, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
