மனிதர்கள் மாறினால்.. செஞ்சி சிறுமி விவகாரம் குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பேச்சு
சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள "அப்பா குட்டி" படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் செஞ்சி சிறுமி காணாமல் போன சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அந்த சிறுமி குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே விஜய் ஆண்டனி, சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ட்ரெயினில் முன் பதிவு இல்லாத சாதாரண வகுப்பில் பயணித்தது பெரிதாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது செஞ்சி சிறுமி குறித்து பேசியதும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

விஜய் ஆண்டனி பேச்சு
விஜய் ஆண்டனி பேசுகையில், "இந்த செயலை செய்தது யார் என்பது தெரியவில்லை. அந்த குழந்தையை எங்கே வைத்திருக்கிறார்கள், இப்போது வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்பதே தெரியாத நிலை மிகவும் வேதனையாக இருக்கிறது. இதுபோன்ற தவறுகள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு மனிதர்கள் மாறினால் தான்.. இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்" என்று அவர் தனது வருத்தத்தை சொல்லி இருக்கிறார்.
காணாமல் போன செஞ்சி சிறுமி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆழம் பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா என்ற ஹேமாவதி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். பிறகு வழக்கம்போல வீட்டில் பெற்றோர் மற்றம் பாட்டியுடன் தூங்கி இருக்கிறார். ஆனால் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று குடும்பத்தினரும் ஒட்டுமொத்த கிராமமும் தேடி இருக்கிறது. முதலில் உள்ளூர்காரர்களும், குடும்பத்தினரும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அனைவரின் கேள்விகள்
தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் அதிகமாக எழுப்பப்படும் கேள்விகள், பெற்றோர் மற்றும் பாட்டியுடன் ஒரே அறையில் தூங்கிய சிறுமி எப்படி காணாமல் போனார்? யாராவது வீட்டுக்குள் வந்து குழந்தையை தூக்கிட்டு போயிட்டாங்களா? அல்லது வேற ஏதாவது நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. சிறுமி மாயமான அதே நள்ளிரவில் பக்கத்து வீட்ல இரக்கு ,சிறுமி அம்மா அம்மா என்று கத்தியது கேட்டது என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது வீட்டில் இருந்தவர்களுக்கு குழந்தை அழுதது கேட்கவில்லையா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போதைய விசாரணை
காவல்துறையினர் ஊர்க்காரர்கள் முதல் பெற்றோர் வரை பலரையும் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்திய தகவலின்படி சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசிக்கும் அண்டை வீட்டாரிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள் அவர்களும் தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை சிறுமி திரும்பி வரவில்லை, எங்கே இருக்கிறார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
அனைவரின் எதிர்பார்ப்பு
இப்படிப்பட்ட சூழலில் தான் விஜய் ஆண்டனி இந்த சம்பவம் குறித்து தனது வேதனையை வார்த்தைகளால் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு குழந்தை காணாமல் போன விவாகரத்தில் யார் குற்றவாளி? என்று தெரியாமல், குழந்தை எங்கே இருக்கிறது என்பதற்கு கூட பதில் கிடைக்காமல் நாட்கள் கடந்து கொண்டிருப்பது எவ்வளவு வேதனை? என்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். சிறுமியை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
