பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்.. 4, 5 இலக்க எண்களில் இவ்வளவு விஷயமா? FSSAI முக்கிய அலர்ட்
சென்னை: ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை வாங்கும்போது அவற்றின் மீது சிறிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். அது எதற்காக ஒட்டப்படுகிறது? அதில் இருக்கும் எண்கள் பழத்தின் தரத்தைக் காட்டுகிறதா? இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியுமா இந்த ஸ்டிக்கரில் இருக்கும் எண்களைப் பற்றிப் பல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அவற்றில் சில உண்மை, சில தவறான புரிதல்கள். ஒவ்வொன்றாக இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

1. பழங்களில் ஏன் ஸ்டிக்கர்?
பழங்களின் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கர் வெறும் அலங்காரத்துக்காக அல்ல. அந்தப் பழத்தின் வகை, அளவு, விற்பனை தொடர்பான விவரங்களை அடையாளம் காண இது உதவுகிறது.
கடைகளில் ஒரே மாதிரி இருக்கும் பல வகை ஆப்பிள்கள் விற்பனைக்கு இருக்கும். அவற்றை எளிதாக வேறுபடுத்தவும், ஃபில்லிங் செய்யும்போது சரியான விலையைப் பதிவு செய்யவும் இந்த ஸ்டிக்கர்கள் பயன்படுகின்றன. சில ஸ்டிக்கர்களில் பழத்தின் பெயர், நிறுவனம் அல்லது இறக்குமதியாளர் விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
2. 1929-ல் தொடங்கிய வரலாறு
பழங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் 1929-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. Fyffes என்ற வாழைப்பழ நிறுவனம் தனது வாழைப்பழங்களைத் தனியாக அடையாளம் காட்ட சிறிய நீல நிற ஸ்டிக்கர்களை ஒட்டியது.
அதன்பிறகு மற்ற பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் வந்தது. இந்தத் தகவலை StickerShop வெளியிட்டுள்ள கட்டுரை தெரிவிக்கிறது. 1990-களில் பழங்களுக்கு PLU எண் கொடுக்கும் முறையும் வந்தது. இதனால் கடைகளில் பழங்களை எளிதாக அடையாளம் கண்டு, அதற்கான விலையைப் பதிவு செய்ய முடிந்தது.
3. PLU எண் என்றால் என்ன?
பழங்களின் மீதுள்ள 4 அல்லது 5 இலக்க எண்களைத்தான் PLU எண்கள் என்கிறார்கள். PLU என்பதன் விரிவாக்கம் Price Look-Up. அதாவது, ஒரு பொருளின் விலையைக் கண்டறிய உதவும் எண். இந்த எண்ணை வைத்து பழத்தின் வகை, அளவு, அது விளைவிக்கப்பட்ட முறை போன்ற விவரங்களை விற்பனையாளர்கள் அடையாளம் காண முடியும். உதாரணமாக, ஒரே வகையான பழம் இயற்கை முறையிலும் வழக்கமான விவசாய முறையிலும் விளைவிக்கப்பட்டிருக்கலாம். அவற்றை வேறுபடுத்த PLU எண்கள் உதவுகின்றன.
4. 4 இலக்க எண்கள்
பழத்தின் ஸ்டிக்கரில் 4 இலக்க எண் இருந்தால், அது பொதுவாக வழக்கமான விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட பழத்தைக் குறிக்கும். இந்த முறையில் ரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பழத்தில் எவ்வளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது என்பதை இந்த எண் சொல்லாது.
4126, 4839 போன்ற எண்கள் இதற்கான சில PLU குறியீடுகள். இவற்றைப் பார்த்து பழத்தில் அதிக கெமிக்கல் உள்ளது போல என்று முடிவு செய்யக்கூடாது.
5. 9-ல் தொடங்கும் நம்பர்
பழத்தின் ஸ்டிக்கரில் 5 இலக்க எண் 9-ல் தொடங்கினால், அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழத்தைக் குறிக்கும் PLU குறியீடாகும்.
உதாரணமாக, வாழைப்பழத்தில் 4011 என்ற எண் இருந்தால் அது வழக்கமான விவசாய முறையில் விளைவிக்கப்பட்டதைக் குறிக்கும். அதே வாழைப்பழத்தில் 94011 என்ற எண் இருந்தால் அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதைக் குறிக்கும்.
அதுக்காக இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதென்றால் எந்தப் பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தமில்லை. இயற்கை விவசாயத்திலும் குறிப்பிட்ட சில பொருட்களைப் பயன்படுத்த அனுமதி இருக்கலாம். எனவே, 9-ல் தொடங்கும் எண்ணைப் பார்த்து மட்டும் பழத்தில் எந்த கெமிக்கலும் இல்லை என்று அர்த்தமில்லை.
6. 8-ல் தொடங்கும் எண்கள்
5 இலக்க எண் 8-ல் தொடங்கினால், அது மரபணு மாற்றப்பட்ட பழம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. முன்பு 8-ல் தொடங்கும் எண்ணை மரபணு மாற்றப்பட்ட பழங்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டார்கள். ஆனால் இப்போது அந்த முறையைப் பயன்படுத்துவதில்லை... அதனால், பழத்தின் மீது 8-ல் தொடங்கும் எண் இருந்தால் அது மரபணு மாற்றப்பட்ட பழம் என்று நினைக்க வேண்டாம்.
7. பூச்சிக்கொல்லி பயன்பாடு
பழத்தின் மீதுள்ள ஸ்டிக்கர் நம்பரை பார்த்து அதில் எந்தளவுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது. அந்த பழம் எந்த வகையில் விளைவிக்கப்பட்டது என்பதை மட்டுமே அடையாளம் காண முடியும். அதற்குதான் இந்த PLU நம்பர்கள் உதவுகின்றன.
அதேபோல், ஸ்டிக்கர் இருப்பதால் அந்தப் பழம் தரமானது அல்லது பாதுகாப்பானது என்றும் உறுதியாக சொல்ல முடியாது.
பழத்தின் தரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதன் தோற்றம், அழுகல் அல்லது சேதம் உள்ளதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும்.
8. ஸ்டிக்கர் ஒட்டுவது கட்டாயமா?
எல்லா பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. PLU எண் முறையும் கட்டாயமானது கிடையாது. இது கடைகளில் பழங்களை எளிதாக அடையாளம் காணவும், பில்லிங் செய்யும்போது சரியான விலையைப் பதிவு செய்யவும் உதவும் முறைதான். அதனால் சில பழங்களில் ஸ்டிக்கர் இருக்கும். சில பழங்களில் இருக்காது. ஸ்டிக்கர் இல்லை என்பதற்காக அந்தப் பழம் தரம் குறைந்தது என்று நினைக்க வேண்டாம்.
9. விழுங்கிவிட்டால் என்னாகும்
பழங்களின் மீதுள்ள ஸ்டிக்கர்கள் பொதுவாக காகிதம் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களாலும், ஒட்டுவதற்கான பசை மற்றும் மையாலும் தயாரிக்கப்படுகின்றன.. அதனால் பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு ஸ்டிக்கரை அகற்றிவிட வேண்டும். தெரியாமல்கூட பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டுவிடக்கூடாது.
10. மறுசுழற்சி செய்யலாமா
பழ ஸ்டிக்கர்கள் சின்னதாக இருந்தாலும் அவற்றை மறுசுழற்சி செய்வது எளிதல்ல... ஏனென்றால் அவை காகிதம் அல்லது பிளாஸ்டிக், பசை, மை போன்றவற்றை கொண்டிருப்பதால் சாதாரண மறுசுழற்சி முறையில் அவைகளை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். அதனால்தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்கும் தன்மை கொண்ட பழ ஸ்டிக்கர்களை உருவாக்கும் முயற்சிகளும் தற்போது நடந்து வருகின்றன.
11. அலர்ட் மக்களே
பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு அவற்றின் மீது இருக்கும் ஸ்டிக்கரை அகற்றிவிட வேண்டும்.. ஸ்டிக்கர் ஒட்டியிருந்த இடத்தில் பழத்தின் தோலையும் சேர்த்து உரிக்க வேண்டும் அல்லது அந்த பகுதியை வெட்டி எடுத்துவிட வேண்டும் என்று FSSAI அறிவுறுத்துகிறது. அதன்பிறகு பழத்தை சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். அதற்காக பழங்களை கழுவ சோப்பு அல்லது டிடர்ஜென்ட் பயன்படுத்தக்கூடாது.
ஸ்டிக்கர் இருப்பதால் பழம் தரமானது அல்லது பாதுகாப்பானது என்று முடிவு செய்ய முடியாது. பழத்தின் மீது அழுகல் அல்லது சேதம் இருக்கிறதா என்பதையும் கவனித்து பார்த்து வாங்கினாலே போதும்..!!


Click it and Unblock the Notifications
