முன்னாள் டிஜிபி மனைவியின் நிலத்தை அபகரிக்க முயற்சி? சிபிசிஐடி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ரவீந்திரனின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாா் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபியாகப் பதவி வகித்த ரவீந்திரன் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார். அவரது மனைவி ராணி புஷ்பலதா ரவீந்திரன் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் ராணி புஷ்பலதா தனது சொத்துகளைத் திலிப்குமார் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த உயிலை செயல்படுத்த வழக்கறிஞராக தன்னை நியமித்துள்ளதாகவும் கூறி பரமசிவம் என்பவர், அந்த உயிலுக்கு சான்றளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, உயிலில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே.முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சொத்துக்கான சட்டப்பூர்வ வாரிசு யாரும் தற்போது ஊரில் இல்லாத நேரத்தில் முன்னாள் டிஜிபியின் மனைவிக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடந்திருப்பதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அந்த அறிக்கையைத் தமிழக டிஜிபி டிசம்பர் 14 அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
