இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க சீனா போடும் கணக்கு.. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சியை முடக்குவதற்கு சீனா பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானுடனான ராணுவ உறவை வலுப்படுத்துவது, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது என பல முனைகளில் சீனா செயல்படுவதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் சமயத்திலும் பாகிஸ்தானுக்கு சீனா முழுமையாக சப்போர்ட்டாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம், 2026ம் ஆண்டுக்கான தனது வருடாந்திர அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவால் கூட்டணி அமைக்க கூடிய நாடாகவும் சீனாவுடன் போட்டியிடும் அளவுக்கு வலிமையும், வளர்ச்சி திறனும் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

China india

கட்டுப்பாடுகள்

சீனாவை சார்ந்திருக்கும் தொழில்துறை மற்றும் உற்பத்தி சங்கிலிகளுக்கு மாற்றாக செயல்பட இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு உதவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவின் இந்த வளர்ச்சியை சீனா விரும்பவில்லை என்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சிகளில் அது தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு சீனா பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் பொருளாதார அழுத்தம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. முக்கியமான தொழில்துறை மூலப்பொருட்கள், தொழில்நுட்பம் மீது சீனா வைத்துள்ள கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இந்தியாவில் அதற்கு போட்டியான உற்பத்தித் திறன் உருவாவதை தடுக்க முயல்வதாக கூறியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு தேவையான முக்கிய பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதன் மூலம், தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

சீனா - பாகிஸ்தான் இடையிலான ராணுவ உறவு வலுப்பெற்று வருவதையும் அமெரிக்க நாடாளுமன்றக் குழு கவலையுடன் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் வலிமையும், பாகிஸ்தானுக்கு அது செய்து வரும் உதவியும் இந்தியாவுக்கு இரு முனைகளில் இருந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் சீனா நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளித்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் அதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல்முறையாக ஒப்புக்கொண்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் கடற்படை செயல்பாடுகள் அதிகரித்து வருவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்

இந்த சூழலை சமாளிக்க இந்தியாவுடன் அமெரிக்கா தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. வெறும் ராணுவ பயிற்சிகளுடன் நின்றுவிடாமல், உளவு மற்றும் கண்காணிப்பு டேட்டாவை பகிர்வது, சீன கடற்படை மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது என தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து என்ன

மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள பரிமாற்றத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, தொழில் துறை மற்றும் கல்வித்துறைகளில் நல்லுறவை உருவாக்க முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சீனாவை சமாளிக்க இந்தியாவால் தான் முடியும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், இந்தியாவின் வளர்ச்சியை சீனா தடுக்க முயல்வதால் அதை சமாளிக்க இந்தியா- அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றே சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+