"எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியது பாலியல் துன்புறுத்தல் இல்லையா? - பெண் நீதிபதி பரபரப்பு பேச்சு!
மதுரை: "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா?" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழு சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது. பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழுத் தலைவர் நீதிபதி விக்டோரியா கௌரி தலைமை வகித்தார். நீதிபதிகள் பூர்ணிமா, அனிதா சுமந்த், ஜெகதீஷ் சந்திரா, ஸ்ரீமதி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.

இந்த நிகழ்வில் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, "தொழில் மற்றும் உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கள்ளக்குறிச்சியில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வது ஆகாதா?
இப்படியான சூழலில் விழிப்புணர்வ ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களை மதித்து கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். பதவி வேறுபாடின்றி அனைவரும், தொழில்முறை ஒழுக்கத்தையும், பரஸ்பர மரியாதையையும் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தான் அப்படி செய்யவே இல்லை என எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கூறினார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோரும் தவெக எம்.எல்.ஏ அப்படிச் செய்யவில்லை என்றே கூறி வந்தனர்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியரின் கணவர், தலைமைச் செயலரிடம் இதுதொடர்பாக புகார் அளித்ததாகவும், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மற்றொருபுறம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு த.வெ.க எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு டிஜிபி மஜேஷ் குமார் அகர்வாலுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
