இந்து குடும்பங்கள் வீட்டில்.. துப்பாக்கி கட்டாயம் இருக்க வேண்டும்! பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு!
ஹைதராபாத்: நாமிருவர், நமக்கிருவர் என்பதை சட்டமாக நாடு முழுவதும் மாற்ற வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில் ஒவ்வொரு இந்து குடும்பங்கள் வீட்டிலும் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும் என்று தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
செய்தித்தாள் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி பேசிய, தெலங்கானாவின் கோஷமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்க கூடும் என்றும், இது இந்துக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானை ஒப்பிட்டு பேசியவர் அங்கு, இந்துக்கள் மீது துன்புறுத்தல், கட்டாய மதமாற்றம், கொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டினார். மேலும், நாடு முழுவதும் உள்ள இந்து குடும்பங்களுக்கு.. உத்தரபிரதேசத்தின் துப்பாக்கி கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்துடன் அவர் நிற்கவில்லை, செய்தியாளர் சந்திப்பின் போது, கையில் துப்பாக்கி ஏந்தியவாறு.. இந்தியாவில், 'நாம் இருவர்! நமக்கு இருவர்!!' சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் இந்துக்கள் தங்கள் குடும்பம் பெண்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் ஆசியுடன் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார் என்றும், மோடி இருந்தால் மட்டுமே 2 குழந்தை சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும்.. அவர் இல்லை என்றால் எதுவும் நடக்காது எனவும், உடனடியாக இரு குழந்தைகள் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரபிரதேசம் பற்றி பேசிய அவர், அம்மாநிலத்தில் உள்ள துப்பாக்கி கலாச்சாரம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும்.. அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும், உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பது போலவே.. இந்தியாவின் ஒவ்வொரு இந்து வீட்டிலும் உரிமம் பெற்ற துப்பாக்கி இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டில் துப்பாக்கி வைத்துக் கொள்ளாவிட்டால், இந்துக்களின் சொத்துக்களுக்கும், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் இருக்காது என்றும் எச்சரித்துள்ளார். அவரது பேச்சு பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
