மகன் நாரா லோகேஷுடன் மோதும் கீர்த்தனா! அப்பா சந்திரபாபுவின் வெற்றிக்காக உழைத்த பின்னணி தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு அண்டை மாநிலங்களுக்கு இடையே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தற்போது ஒரு பெரிய அரசியல் மோதல் வெடித்துள்ளது. முக்கியமாக் தவெக அரசு வந்த பின் ஆந்திர பிரதேசம் ஆட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தமிழகத்திற்கு வர வேண்டிய முக்கிய தொழில் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ஆந்திர தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷும், தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவும் சமூக வலைதளங்களில் மறைமுகமாக மோதிக்கொண்டிருப்பது தென்னிந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அரசு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் இருந்து சமீபத்தில் சுமார் 15 ஊழியர்கள் வெளியேறினர். மே 2026-ல் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த மாற்றங்கள் நடந்தன.
இந்நிலையில், வெளியேறிய ஊழியர்களில் 3 பேர் ஆந்திரப் பிரதேச முதலீட்டு பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்தனர். விசாகப்பட்டினத்தில் நடந்த மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இவர்களைப் பாராட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீட்டாளர்களின் ரகசியத் தகவல்களை இந்த முன்னாள் ஊழியர்கள் ஆந்திர அரசுக்கு கசியவிட்டதாகவும், அதனால் பல நிறுவனங்கள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பின.
ஆனால், கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஊழியர்கள் வேலையை விட்டுச் செல்வது என்பது எந்த ஒரு நிறுவனத்திலும் நடக்கும் சாதாரண நிகழ்வுதான் என்றும், யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும், அண்டை மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டியையே தமிழகம் விரும்புவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
நாரா லோகேஷின் கிண்டல் பதிவு
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் நவம்பர் 20-ஆம் தேதி தனது எக்ஸ் தளத்தில் தமிழகத்தைக் கிண்டல் செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டார். அதில், முக்கியச் செய்தி.. ஆந்திரப் பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு வியூகம் கசிந்துவிட்டது. அதன் பெயர் முதலீட்டாளர்களுக்கு அன்றைய தினமே பதில் அளிப்பது.. யார் வேண்டுமானாலும் இதைத் தாராளமாக காப்பி அடித்துக்கொள்ளலாம், என்று பதிவிட்டு, தொழில்துறை வேகத்தைக் குறிக்கும் ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார். மேலும், ஆந்திராவில் அமையவுள்ள ஒரு புதிய தொழிற்சாலை குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
அமைச்சர் கீர்த்தனாவின் பதிலடி
நாரா லோகேஷின் இந்த மறைமுகத் தாக்குதலுக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா மிகவும் நிதானமாகவும் பதிலடி கொடுத்தார்.
நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசின் இரண்டாவது வெற்றி முதலீடு மற்றும் செயல்பாட்டு மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், வேகமாக நீங்கள் பதில்கள் தருவது நல்லதுதான்.. ஆனால் வேகமான செயல்பாடுதான் அதைவிடச் சிறந்தது.. என்று பதிவிட்டார். மேலும், வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடாமல், முதலீட்டு ஒப்பந்தங்களை தொழிற்சாலைகளாக மாற்றுவதிலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலுமே முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
கவனம் ஈர்க்கும் பழைய நட்பு
இந்த மோதலில் பலரையும் மிகவும் ஆச்சரியப்பட வைத்த விஷயம், அமைச்சர் கீர்த்தனாவின் பழைய பின்னணிதான். அவரே ஆந்திர பின்புலத்தை சேர்ந்தவர்தான். 29 வயதான கீர்த்தனா, மே 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் இளம் அமைச்சரானார். தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் ஐ-பேக் மற்றும் ஷோடைம் கன்சல்டிங் போன்ற பிரபல தேர்தல் வியூக நிறுவனங்களில் பணியாற்றினார்.
குறிப்பாக, 2024 பொதுத் தேர்தலின் போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வெற்றிக்காக வியூகம் வகுத்த முக்கியப் பங்கு கீர்த்தனாவுக்கு உண்டு. தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளை சரளமாகப் பேசக்கூடிய இவர், அப்போது நாரா லோகேஷ் மற்றும் சந்திரபாபு நாயுடுவுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி நல்ல நட்பைப் பராமரித்து வந்தார். அன்று சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷின் வெற்றிக்காக வியூகம் வகுத்த கீர்த்தனா, இன்று தமிழகத்தின் அமைச்சராக நின்று அவருக்கே பதிலடி கொடுப்பது பேசுபொருளாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
இதற்கிடையில், இந்த விவகாரம் தமிழக மற்றும் ஆந்திர அரசியலிலும் எதிரொலித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் ஊழியர்கள் தங்கள் திறமையின் அடிப்படையிலேயே ஆந்திராவில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்றும், அவர்கள் மீது உளவு பார்த்ததாகப் பழி சுமத்துவது தவறு என்றும் விமர்சித்துள்ளார்.
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சமூக வலைதள அரசியலுக்காக கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் நற்பெயரை தவெக அரசு கெடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம் ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து நாரா லோகேஷை விமர்சித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் இரு மாநிலங்களுக்கும் இடையிலான போட்டி ஆரோக்கியமானதா அல்லது அரசியல் மோதலாக மாறுகிறதா என்பதை வரும் நவம்பர் 25-ஆம் தேதி நடக்கவுள்ள முதலீட்டு மாநாட்டின் முடிவுகளே தீர்மானிக்கும்.


Click it and Unblock the Notifications
