நாகர்கோவில் ரயில் பெட்டிக்குள் பெண் சடலம்! என்ன நடந்தது? டிஜிபி அறிக்கை அளிக்க மகளிர் ஆணையம் உத்தரவு
குமரி: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிக்குள் கொலை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மகளிர் உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அவர் யார் என கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்த நிலையில் மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 18 ஆம் தேதி நாகர்கோவில் ரயில் நிலையத்தின் யார்டு பகுதியில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் துர்நாற்றம் வீசியது. ரயில்வே போலீசார் பார்த்த போது பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அந்த பெண் கொடூரமாகக கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண் யார், எதற்காக கொலை செய்யபப்ட்டார்? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணை செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி அய்யப்பன் என்பவர் தான் கொலை செய்ததாக அவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், அய்யப்பன் அந்த பெண்ணை ரயில் பெட்டிக்குள் கட்டாயப்படுத்தி இழுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. அந்த பெண் இந்தியில் பேசியதாகவும் இதனால் அவர் வடமாநில பெண்ணாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அந்த பெண்ணின் விலா எலும்பு மற்றும் வயிற்று பகுதியில் காயமடைந்து இருந்ததாகவும், அவர் அணிந்திருந்த மோதிரம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதை வைத்து கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். ரயில் பெட்டிக்குள் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தாமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம்,
சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பிறகே பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்றும், பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
