அதிமுகவில் 2 கோடி தொண்டர்களா? ஓட்டு ஒரு கோடி தானே விழுது.. எடப்பாடிக்கு கேசி பழனிசாமி கேள்வி
சென்னை: 2 கோடி தொண்டர்கள் என்று சொல்றீங்க.. ஆனா உங்களுக்கு விழுந்ததோ ஒரு கோடி ஓட்டு தான்.. இது ஏன் என்று உங்களுக்கு புரிகிறதா என எடப்பாடி பழனிசாமிக்கு கே.சி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு துளியும் இல்லை. கட்சியை உங்கள் குடும்பச் சொத்தாக்க வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்குறீங்க. இதற்காக அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்றார். அவரிடமோ அல்லது திமுகவினரிடமோ ஒருங்கிணைப்பு பற்றி பேசுகிறீர்களா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், கேசி பழனிசாமி இதற்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக கேசி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

கேசி பழனிசாமி விமர்சனம்
வைகோ 1993-ல் திமுகவிலிருந்து பிரிந்தார். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வைகோவுடன் திமுகவிலிருந்து 16-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் சென்றார்கள். அதேபோல், அதிமுகவிலிருந்த முக்கிய நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தார்கள்.
1 கோடி வாக்குகள் மட்டுமே ஏன்?
நீங்கள் எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறீர்களா? மாற்றுக் கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் அல்லது முக்கிய நிர்வாகிகள் யாராவது உங்களை நம்பி வந்து இணைந்திருக்கிறார்களா?.. 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் அது உண்மைதான். ஆனால், 2 கோடி தொண்டர்களை வைத்துக்கொண்டு வெறும் 1 கோடி வாக்குகளை மட்டுமே பெறும் ஒரே உத்தமத் தலைவர் நீங்கள் மட்டும்தான்! இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சியை உங்கள் குடும்பச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே நீங்கள் குறியாக இருக்கிறீர்கள். இதற்காக ஒன்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், ஜெயலலிதா அம்மாவும் இந்த இயக்கத்தை உருவாக்கி வளர்க்கவில்லை. உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்கள்.. என்று கூறியுள்ளார்.
2 கோடி தொண்டர்களில் ஒருவர் எஸ்பி வேலுமணி
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து தோல்வியையே சந்தித்து வருவதாகவும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் கட்சிக்குள்ளேயே கலகக் குரல்கள் எழத் தொடங்கின. அதிமுக எம்.எல்.ஏ எஸ்பி வேலுமணியும் இதே கருத்தை முன்வைத்து பேசி வருகிறார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்பி வேலுமணி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி, "அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களில் ஒருவர் தான் எஸ்பி வேலுமணி. இதில் தனி எல்லாம் கிடையாது. 2 கோடி உறுப்பினர்களில் ஒரு நபர் தான் வேலுமணி. எனவே அவர் பேசுவதை எல்லாம் வைத்து என்னிடம் கேட்காதீர்கள்.. என்றார்.
அதிமுக தொண்டன் என்று கூறியதற்கு நன்றி
இதற்கு மீண்டும் பதில் அளித்த எஸ்பி வேலுமணி, தொண்டர்களின் பேச்சை கேட்க வேண்டும் என்று தான் சொல்லி வருகிறோம். என பதிலளித்துள்ளார். அதிமுகவின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.. என பதில் அளித்துள்ளார்.





Click it and Unblock the Notifications
