அல்பேனியா மாரத்தான் போட்டியில் 3-வது இடம்.. ரொக்கப் பரிசு வென்று தமிழக வீரர் நியாஸ் கான் சாதனை!
திரானா: அல்பேனியா நாட்டின் தலைநகரான திரானாவில், கடந்த நவம்பர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 10-வது ஆண்டு சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் நியாஸ் கான் கலந்து கொண்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் களமிறங்கிய நியாஸ் கான், உலக நாடுகளின் வீரர்களுடன் போட்டி போட்டு ஓடி, ஒட்டுமொத்தப் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம் அவருக்குப் பதக்கமும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், சொந்த மண்ணான தமிழகத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

கடின உழைப்பும், தினசரிப் பயிற்சியுமே நியாஸ் கானின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமாகும். ஏற்கனவே இவர், உலகின் மிக முக்கியமான ஆறு மாரத்தான் போட்டிகளையும் வெற்றிகரமாக ஓடி முடித்து, 'சிக்ஸ் ஸ்டார் பினிஷர்' (Six Star Finisher) என்ற உயரிய அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஓட்டப்பந்தயங்களில் தொடர்ந்து சாதித்து வரும் நியாஸ் கானுக்கு, திரானா மாரத்தான் வெற்றி மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. சாதனை படைத்த நியாஸ் கானுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
