காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து? தெலங்கானாவில் சொந்த கட்சிக்குள்ளேயே அதிகரிப்பும் எதிர்ப்பு!
ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான அதிருப்தி சொந்த கட்சிக்குள்ளேயே அதிகரித்து வருகிறது. இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே ரேவந்த் ரெட்டி ஆட்சியை விமர்சித்து வந்த நிலையில், இப்போது ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவ்வளவு ஏன் அமைச்சர்களும் கூட வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
தெலுங்கானாவில் கடந்த 2023ம் ஆண்டு முதல் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும், இப்போது ரேவந்த் ரெட்டி மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. அதுவும் எதிர்க்கட்சிகள் இல்லை.. ஆளும் கட்சியினரே அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதிருப்தி
தொகுதி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார், அரசு நிர்வாகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், அமைச்சர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் என பல விவகாரங்கள் அடுத்தடுத்து சர்ச்சையாகி வருகின்றன. இந்த அதிருப்தி தொடர்பாகக் காங்கிரஸ் மேலிடத்துக்கும் புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், உட்கட்சி பிரச்சினைகளை சமாளிக்க புதிய மாநில பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய மோதலுக்கு முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டியின் குற்றச்சாட்டுகள் காரணமாக அமைந்தன. முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருக்கமாக இல்லாத எம்எல்ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவருக்கு நெருக்கமான எம்எல்ஏக்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதே புகாராகும்.
சர்ச்சை
இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, அதிருப்தி தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் பெயர்களை குறிப்பிடாமல், தனது கட்சியை சேர்ந்த சில தலைவர்களையே வெறிநாய்களால் கடிக்கப்பட்டவர்கள் என்று விமர்சித்தார். இதனால் சர்ச்சை மேலும் தீவிரமானது. முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜகோபால் ரெட்டி, அரசியலமைப்பு சார்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்படி பேசக்கூடாது என்று கடுமையாக சாடினார்.
ஊழல் புகார்
இதற்கு முன்பாகவே ஜட்கர்லா தொகுதி எம்எல்ஏ அனிருத் ரெட்டி, அரசு நிர்வாகம் தொடர்பாகப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சிறிய வளர்ச்சி பணிகளுக்குக்கூட அரசு அதிகாரிகள் 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் பணிகளுக்கான பில்கள் நிலுவையில் வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இப்படி சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான பில்கள் நிலுவையில் இருப்பதாகக் கூறிய அவர், இந்த பிரச்சினையை தீர்க்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் எனவும் எச்சரித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பேரணியின்போது, மூத்த அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மாவுக்கும் ஜுக்கல் தொகுதி எம்எல்ஏ லக்ஷ்மிகாந்த ராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அரசியலில் யாருக்கு செல்வாக்கு என்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் இந்த மோதலுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. அதேபோல தொழில்துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபுவுக்கும் பெத்தப்பள்ளி எம்பி ஜி. வம்ஷி கிருஷ்ணாவுக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது.. இப்படி ஏகப்பட்ட மோதல்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது.
அடுத்து என்ன
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் நிலையில், அதை சமாளிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தெலங்கானா பொறுப்பாளராக சந்தீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களின் குறைகளைக் கேட்டறிவது, அமைச்சர்களுக்கு இடையிலான மோதல்களை சரிசெய்வது, ஊழல் புகார்களை ஆய்வு செய்வது, தொகுதிகளுக்கான வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்வது ஆகியவை இப்போது முக்கிய வேலைகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications
