யோகா பயில வந்த 57 வயது ஜப்பான் பெண்.. பாலியல் தொல்லை அகாடமியின் 39 வயது ஓணர் கைது..
திருவனந்தபுரம்: அவருக்கு வயது 57. சொந்த நாடு ஜப்பான். யோகா ஆசிரியையாக மாற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். இதற்காக யோகா கற்க நினைத்தார். அதற்கு தேர்வு செய்த இடம் தான் இந்தியா. ஏனென்றால் இந்தியா தானே யோகாவின் தாயகம். இப்படி நம்பிக்கையுடன் யோகா கற்க வந்த ஜப்பான் பெண்ணை, யோகா அகாடமியின் ஓணர் ஒருவர் 3 நாள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

ஜப்பானை சேர்ந்தவர்57 வயது பெண். இவருக்கு யோகா மீது அதிக ஆர்வம். எப்படியாவது யோகா கற்க வேண்டும். அதோடு யோகா கலையை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க வேண்டும். இதனால் யோகா ஆசிரியையாக மாற நினைத்தார்.
இதனால் 'யோகா' பிறந்த நாடான இந்தியா வந்து கேரளா வர்கலா பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் சேர்ந்தார். அகாடமியிலேயே தங்கி 300 மணிநேர யோகா பயிற்சிக்கு பணம் செலுத்தினார்.
இந்த அகாடமியின் ஓணர் ஆந்திராவை சேர்ந்தவர். அவருக்கு 39 வயது ஆகிறது. அகாடமியில் ஜப்பான் பெண்ணுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் ஜப்பான் நாட்டு பெண்ணிடம் அகாடமி ஓணர் தவறாக நடந்துள்ளார். அக்டோபர் 28, 30 மற்றும் 31 என 3 நாட்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி ஜப்பான் பெண் அளித்த புகாரில் அகாடமி ஓணரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி வர்கலா டிஎஸ்பி ரமேஷ் கூறுகையில், ''கைதான அகாடமி ஓணரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினோம். இப்போது 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்'' என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அகாடமியில் யோகா வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ''அக்டோபர் 28 ம் தேதி இரவு உணவை முடித்த பிறகு அகாடமி ஓணர் எனக்கு மசாஜ் செய்தார். யோகா ஹாலுக்கு அழைத்து சென்று பாலியல் உறவு வைத்தார். பிறகு அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளிலும் பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை அவரை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனென்றால் நான் அவரிடம் இந்த யோகா கலையை கற்பதற்காகவும், தங்கவும் பணம் செலுத்தி இருந்தேன். ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் யோகா கற்றதற்கான சான்று கிடைக்காமல் போகலாம் என்று அமைதியாக இருந்தேன்.
வெளிநாட்டில் இருந்து வந்ததால் எனக்கு இங்கு யாரையும் தெரியாது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு அகாடமி ஓணர் அடிக்கடி என்னுடைய அறைக்கு வருவார். அவரது தொல்லை தாங்க முடியாமல் ஒருநாள் முழுவதையும் திருவனந்தபுரத்தில் உள்ள மாலில் செலவழித்து உள்ளேன்.
அதோடு அகாடமி பற்றி பாசிட்டிவ்வான ரிவ்யூ வழங்கவும் என்னை கட்டாயப்படுத்தினர். இதனால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன். இந்த சம்பவத்தை உலகம் முழுவதும் இருப்பவர்கள் அறிய வேண்டும் என்று விரும்பினேன். இதனால் தான் எனக்கு நடந்த கொடுமை பற்றி வெளியே கூறியுள்ளேன்'' என்றார்.


Click it and Unblock the Notifications
