திருப்பரங்குன்றத்தில் 'டைட்’ செக்யூரிட்டி.. விவரங்களை நோட்டில் பதிவு செய்தபிறகே பக்தர்களுக்கு அனுமதி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் மலை முழுவதும் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெயர், செல்போன் எண் ஆகியவற்றை நோட்டில் பதிவு செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை மறுநாள் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோட்டை தெருவின் நுழைவு வாசலில் இருபுறமும் மூங்கில் மரங்களால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் படிக்கட்டு பாதையின் பக்கவாட்டிலும் மூங்கில்களால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பழனியாண்டவர் கோவில் வாசல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதை, பழனியாண்டவர் கோவில் வளாகத்திலும், மலையின் கிழக்கு பகுதியில் உள்ள புதிய படிக்கட்டு பாதையிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா, தீபத்தூண் ஆகிய இடங்களிலும், கீழே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நுழைவு வாயில், 16 கால் மண்டபம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, பெயர், செல்போன் எண் ஆகியவற்றை நோட்டில் பதிவு செய்த பிறகே முருகன் பக்தர்களும், சிக்கந்தர் தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்களையும் மலைக்கு செல்ல அனுமதித்து வருகிறார்கள்.
மலைக்குச் செல்ல வருபர்கள் பை உள்ளிட்ட உடைமைகள் கொண்டு வந்தால் அவற்றை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே மலைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், குடிநீர் உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் மலைக்குச் செல்ல வருபவர்களிடையே உணவு உள்ளிட்ட சில பொருட்கள் எடுத்து செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் இருந்த நடைமுறைகள், சில கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாகவும், நாளை (திங்கட்கிழமை) வரை பக்தர்கள் அனைவரும் மலைக்கு சென்று வர அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
