மிடில் ஆர்டரில் களமிறங்கும் ருதுராஜ்.. சிஎஸ்கே அணியின் நம்பர் 4ல் விளையாட திட்டமா? பின்னணி என்ன!
மும்பை: சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணியின் நம்பர் 4 வீரராக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடி வருகிறார். நியூசிலாந்து மண்ணில் இருந்து திரும்பிய பின் ருதுராஜ் கெய்க்வாட் நேரடியாக சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடி வரும் மகாராஷ்டிரா அணியில் இணைந்தார். மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சாஹில் பாரக் செட்டாகிவிட்டனர்.

அவர்களை தொல்லை செய்யக் கூடாது என்று நம்பர் 4 பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய அதிரடி ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் மீது மற்றொரு சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக ஜாகீர் கான் பொறுப்புக்கு வந்துள்ளார். இந்தியாவிலேயே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள கூடிய ஒரு பேட்ஸ்மேனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்து வருகிறார். இதனால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய ருதுராஜ் கெய்க்வாட் மிடில் ஆர்டருக்கு கொண்டு வரப்படுவதாக பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே மற்றும் உர்வில் படேல் ஆகியோர் இருக்கின்றனர். அவர்கள் பவர் பிளேவில் விளையாடினால், சிஎஸ்கே அணியால் எளிதாக 100 ரன்களை சேர்க்க முடியும். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் மிடில் ஓவர்களில் இறங்கி ஃபினிஷிங் பொறுப்பை ஏற்க முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
மிடில் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட், பிரெவிஸ் மற்றும் சிவம் துபே களமிறங்கினால், அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியை மரியாதையான இலக்கை நோக்கி அழைத்து செல்வார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் வரிசையை மாற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
