முதல் முறை உடலுறவு கொள்ளும்போது உடலில் என்ன நடக்கும்? அறிவியல் சொல்லும் உண்மை!
சென்னை: பாலியல் தொடர்பான விஷயங்கள் இந்தியாவில் வெளிப்படையாக பேசப்படுவதில்லை. இதனால் பாலியல் ஆரோக்கியம் குறித்த பல பொய்யான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளன. இதனால் முதல் முறை உடலுறவு கொள்ளும்போது உடலிலும் மூளையிலும் உண்மையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் ரீதியாகத் தெரிந்துகொள்வது அவசியம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
முதல்முறையாக உடலுறவு கொள்வது என்பது பலருக்கும் பல்வேறு விதமான அனுபவங்களை கொடுக்கும். அனைவருக்கும் இது ஒரேபோல இருக்கும் என சொல்லிவிட முடியாது. உற்சாகம், பதற்றம், ஆர்வம் என இது பல உணர்வுகளை கொடுக்கும். சினிமாக்களில் காட்டப்படுவதை போல அது அனைவருக்கும் இனிமையான அனுபவமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. உடல் மற்றும் மனம் இரண்டிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.

முதலில் மூளைதான்!
உடலுறவின்போது மாற்றங்கள் மூளையில்தான் தொடங்குகின்றன. உணர்ச்சிகளையும் பாலியல் உறவுகளை கட்டுப்படுத்தும் மூளையின் லிம்பிக் சிஸ்டம் தான் முதலில் செயல்படுகிறது. அப்போது மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கும் டோபமைன், நெருக்கத்தையும் பிணைப்பையும் அதிகரிக்கும் ஆக்ஸிடோசின் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. உடலுறவுக்கு பிறகு நிம்மதியையும் அளிப்பதில் செரோடோனின், எண்டார்பின்களும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் முதல் பாலியல் அனுபவம் உடல் சார்ந்ததாக மட்டுமின்றி, மனதளவிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அப்போது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசத்தின் வேகம், உடல் வெப்பநிலை ஆகியவை அதிகரிக்கின்றன. உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலமே இதற்கு காரணம்.
உடலில் நடக்கும் மாற்றங்கள்
பெண்களுக்கு பாலியல் தூண்டுதல் ஏற்படும்போது பிறப்பு உறுப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆனால் பதற்றம் ஏற்பட்டாலோ அல்லது விருப்பமில்லாமல் உடலுறவு கொண்டாலோ முதல் முறை உடலுறவின்போது அசௌகரியம் அல்லது வலி ஏற்படலாம். இது பின்னாட்களில் உடலுறவு கொள்ள ஒருவித மனரீதியான தயக்கத்தையும் ஏற்படுத்தலாம்.
ஆண்களுக்கு மூளையிலிருந்து வரும் நரம்பு சிக்னல்கள் ஆணுறுப்பில் உள்ள ரத்த நாளங்களை விரிவடைய செய்கின்றன. முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது இயல்பாகவே பதற்றம் அதிகரிக்கும். இதனால் விறைப்புத்தன்மை பாதிப்பு அல்லது விரைவில் விந்து வெளியேறுவது போன்றவை ஏற்படும். பதற்றத்தால் அட்ரினல் சுரக்கும் என்பதால் அது இன்னும் நிலைமையை சிக்கலாக்கும். எனவே, முதல்முறை சொதப்பினால் ஆண்மை குறைவு என நினைக்க தேவையில்லை.
அடுத்து என்ன நடக்கும்
உடலுறவின்போதும் அதற்கு பிறகும் ஆக்ஸிடோசின், புரோலாக்டின், எண்டார்பின்கள் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது உடலுக்கும் மனதுக்கும் தளர்வு மற்றும் திருப்தியை ஏற்படுத்துகின்றன. இதனால்தான் பலருக்கும் உடலுறவுக்கு பிறகு தூக்கம் வரலாம். ஆண்களுக்கு புரோலாக்டின் சுரப்பதால் மீண்டும் பாலியல் தூண்டுதல் ஏற்படுவதற்கு ஒரு சில காலம் தேவைப்படும்!
கவனம்
முதல் முறையாக உடலுறவு கொண்ட பிறகு மகிழ்ச்சி, குழப்பம் அல்லது சோகம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் ஏற்படலாம். அது இயல்பானதே! மேலும், பாதுகாப்பற்ற உடலுறவு என்பது எப்போதுமே ஆபத்தானது. பாலியல் சார்ந்த நோய்கள் பரவக்கூடும். எனவே கருத்தடை மட்டுமின்றி தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்க ஆணுறை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
மொத்தத்தில் முதல் பாலியல் அனுபவம் என்பது உடல் சார்ந்தது மட்டுமில்லை. அது மனம், உணர்வுகள், ஹார்மோன்கள் அனைத்தும் இணைந்த அனுபவம். அது ஒரு போட்டியோ சோதனையோ அல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்!


Click it and Unblock the Notifications
