விவசாயிகள் தற்கொலை செய்துக்கிறாங்க! முதல்வர் விஜய் ஹேர் ஸ்டைலை மாற்றிகிட்டு இருக்காரு! அதிமுக மாஜி

Subscribe to Oneindia Tamil

மதுரை: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், முதல்வர் விஜய் ஹேர் ஸ்டைலை மாற்றுவதில் அக்கறை காட்டுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

RB Udhayakumar

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்கிற சொக்கலிங்கம், ஆவுடையார்கோவிலில் 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ஆனால், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால், 2 முறை பயிரிட்டும் மன வேதனை அடைந்த சொக்கலிங்கம், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என குடும்பத்தினருடன் புலம்பியுள்ளார்.

பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் தற்கொலை

இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் காலை வயலுக்குச் சென்று பார்த்தபோது, சொக்கலிங்கம் அங்குள்ள மரத்தில் தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பயிர்கள் கருகிய வேதனையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

காவிரி பாசனம்

காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலாக சம்பா மற்றும் தாலடி பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததால், ஏற்கெனவே குருவை சாகுபடி பொய்த்துப் போயிற்று.

தண்ணீர் திறந்து விடப்பட்டும், சாகுபடி காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாத காரணத்தினாலே, தற்போது குருவை சாகுபடி எப்படி கைகொடுக்கவில்லையோ, அதேபோல சம்பா மற்றும் தாலடி பயிர்களும் இன்றைக்கு வாடி வதங்கிவிட்டதால் உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காவேரி டெல்டா பகுதியை வறட்சி பகுதியாக உடனடியாக ஆய்வு செய்து, அவர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு, நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை அந்தப் பகுதியிலே இருக்கிறது. இல்லையென்றால் தற்கொலை சம்பவங்கள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறதைப் போல, மிகப்பெரிய ஒரு அபாயகரமான சூழ்நிலையில் அந்த விவசாயிகள் இருக்கிறார்கள்.

அதிர்ச்சி

மன அழுத்தத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு இழப்பீடு, காப்பீடு, நிவாரணம் அரசு வழங்க வேண்டும். இந்த நிலையில் மேலும் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால், காவிரி நீர் பங்கீட்டில் நமக்கான உரிமையைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தவெக அரசு தாக்கல் செய்திருந்த 2 மனுக்களும் தள்ளுபடி ஆகி இருப்பது நமக்குப் பெரும் பின்னடைவைத் தந்திருக்கிறது. நமக்கு உரிய பங்கைப் பெறுவதில் கோட்டை விட்டிருக்கிறது தவெக அரசு.

முதல்வரின் வழக்கமான மௌனம்தான் இப்போது இந்த விஷயத்திலும். காவேரி விஷயத்திலும் மௌனம் காப்பது விவசாயிகளை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இதில் முதல்வரின் இந்தத் தொடர் மௌனம் தமிழகத்திற்கு பாதகமான பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் வறட்சி

இந்தியாவிலேயே வறட்சி நிவாரணத்தை வழங்கிய அரசு ஜெயலலிதாஅரசாகும். இதனால் டெல்டா மாவட்ட மக்களை காப்பாற்றிய அந்த வரலாறையும் இங்கே நினைவு கூறுகிறேன். மாற்றத்தைத் தருவார் என முதல்வரை நம்பி வாக்களித்த மக்களுக்கு, முதல்வர் தினந்தோறும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றம் செய்வதில் அக்கறை செலுத்தி, மாற்றம் தந்து கொண்டிருக்கிறார். மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாகத் தந்து கொண்டிருக்கிறார்.

நேற்று கூட திருமண விழாவில் மிக அழகாக ஒரு ஹேர் ஸ்டைலில் முதல்வர் காட்சி அளித்தார். கண்ணுக்கு விருந்தாக இருந்தாலும், ஆனால் விவசாயிகள் படுகிற வேதனையைப் பார்க்கிறபோது கண்ணிலே கண்ணீர்தான் வருகிறது.

ஹேர் ஸ்டைலுக்கு முக்கியத்துவம்

ஆகவே, முதல்வர் நடிகராக இருந்தபோது தன்னுடைய ஹேர் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தருவதில், அக்கறை செலுத்துவதில், நேரம் செலவழிப்பதில் யாருக்கும் எந்தப் பாதகமும் வந்துவிடாது.

ஆனால், இப்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலுக்கு மாற்றத்தைத் தருவதில் அவர் செலுத்துகிற அக்கறையை தமிழக விவசாயிகளுடைய வாழ்வில் மாற்றத்தை உருவாக்குவதற்கு நேரத்தைச் செலவழிப்பாரா? என்னடா உதயகுமார் இப்படி தரம் தாழ்ந்து விமர்சிக்கிறாரே என்று நீங்கள் நினைக்கக்கூடாது.

புரியாத புதிர்

ஏனென்றால், அவர் செய்து வருகிற ஹேர் ஸ்டைல் மாற்றத்துக்குத்தான் ஊடகத்திலே கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பார்க்கிறபோது, நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

ஆஹா, நம்ம முதல்வர் விஜய் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டார், பார்த்தீர்களா, பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக, கியூட்டாக இருக்கிறார் என்றெல்லாம் இன்றைக்கு சமூக வலைதளங்களில் விவசாயிகளைப் பற்றி மறந்துவிட்டனர்.

விவசாயிகள் கடன்

ஒருபுறத்திலே விவசாயிகள் கடனிலிருந்து மீள முடியாமல் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி எந்தவிதமான விளக்கமும் கொடுக்காமல், தீர்வும் காணாமல், முதல்வர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிவிட்டார் என்கிற செய்தி தலைப்புச் செய்தியாக இருக்கிறபோது, நாம் இதை எங்கே போய் முறையிடுவது? இறைவனிடத்தில் முறையிடுவதைத் தவிர, நமக்கு வேறு விடிவு காலம் இல்லை.

ஹேர் ஸ்டைல்

ஆகவே, முதல்வரே, இதை நீங்கள் விமர்சனமாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்பிக்கையோடு சொல்லுகிறேன். உங்களுடைய ஹேர் ஸ்டைலுக்கும், உங்களுடைய உடை அலங்காரத்திற்கும் நீங்கள் செலுத்துகிற அந்த அக்கறையும், நீங்கள் செலவழிக்கிற அந்த நேரத்தையும், உங்கள் கையில் கொடுத்திருக்கிற ஆட்சி அதிகாரத்தினால் மக்களின் வாழ்விலே ஒளிவிளக்கு ஏற்றி வைத்து, வெளிச்சம் படர, முன்னுரிமையாக நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய் என்று கேட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறது அன்னை தமிழக விவசாயி மக்கள்.

விவசாயிகள் தற்கொலை

தற்கொலையை போர்க்கால அடிப்படையிலே தடுத்து நிறுத்துவதற்கு வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணத்தைத் தருவாரா? ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோரின் அரசை முன்மாதிரியான அரசாக எடுத்துக் கொள்வாரா முதல்வர் விஜய் என கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+