கையாலாகாத விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசு.. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கலையே! விளாசிய எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை மாதாந்திர வாரியாக பெற முடியாத அரசு, கையாலாகாத அரசு தமிழக வெற்றிக் கழக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சமூக வலைதளங்களிலே தெளிவாக விளக்கமாக நான் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி டெல்டா பகுதியில் இருக்கின்ற விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை இவர்கள் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அதனால் குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, சம்பா சாகுபடிக்கு முதலமைச்சர் நேரடியாக மேட்டூர் அணைக்கு சென்று 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.

Edappadi Palaniswami Vijay TVK

எடப்பாடி பழனிசாமி

45 நாட்கள் எப்படி போதும்? இன்றைக்கு முழுமையான விளைச்சல் பெற வேண்டும் என்று சொன்னால், ஜனவரி இறுதி வரை காவிரியில் தண்ணீர் விட்டால்தான் டெல்டா மாவட்ட விவசாயிகள் முழுமையான பயனை பெற முடியும். ஆனால் 45 நாள் என்று சொல்கிறார்கள். அதோடு மேட்டூர் அணையிலும் தண்ணீர் குறைவாக இருக்கிறது. 25.61 அடிதான் இருக்கிறது. இது குடிப்பதற்கே போதாது. மே மாதம் வரை குடிதண்ணீர் தேவை. அதற்கு பிறகுதான் கேட்ச்மெண்ட் ஏரியாவில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு தேவையான நீர் கிடைக்கும்.

விஜய் அரசு

இந்த ஆட்சி வந்த பிறகு காவிரி நதிநீர் பிரச்சனையில் கவனமே செலுத்தவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நாள் வரை இவ்வளவு டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவு போட வேண்டும். அந்த உத்தரவை பெறுவதற்கு உண்டான முயற்சியும் தமிழக வெற்றிக் கழக அரசு எடுக்கவில்லை. முதலமைச்சர் தனியாக அக்கறை செலுத்தவில்லை.

தவெக ஆட்சி

நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீர் மாதாந்திர வாரியாக வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று தந்தது அதிமுக அரசு. அந்த தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்தாத கையாலாகாத அரசு தமிழக அரசு. தினந்தோறும் அறிவிப்பு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். டெல்டா மாவட்ட விவசாயி பதறிப்போய், அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். அதற்கு ஏதாவது பதில் கொடுக்க வேண்டும் என்றால் பதிலே கொடுக்கவில்லை.

காவிரி நதிநீர் பிரச்சனை

ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனை சம்பந்தமாகவும், மேகதாது அணை பிரச்சனை சம்பந்தமாகவும், மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் தொடர்ந்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆனால் நம்முடைய முதலமைச்சர் வாயே திறக்கவில்லை. எந்த பதிலும் கிடையாது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய அச்சத்தை போக்கும் விதமாகவாவது, இனியாவது மேகதாது அணை குறித்து முதலமைச்சர் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம்

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிற வரைக்கும் மேகதாது அணை கட்ட விடமாட்டோம். இன்றைக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் அழகான தீர்ப்பை பெற்று தந்திருக்கிறோம். கீழ்படுகை மாநிலத்தினுடைய அனுமதி இல்லாமல் மேல்படுகை மாநிலம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது. எந்த ஒரு கட்டுமானத்தையும் தொடரக்கூடாது. தண்ணீரை தேக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று அற்புதமான தீர்ப்பை பெற்று தந்துள்ளோம். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது இன்றைய அரசாங்கம்தான்.

காவிரி மேலாண்மை ஆணையம்

இன்றைக்கு கூட 11 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட, கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. 11 டிஎம்சி தண்ணீர் திறக்கவில்லை என்று சொல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கே தள்ளுபடி ஆகிப்போச்சு. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளன. அங்கு எவ்வளவு மழை பெய்கிறது? எவ்வளவு நீர் அணைக்கு வருகிறது? என்ற விவரங்களை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தருகிறார்கள்.

டெல்டா விவசாயிகள்

அதன் அடிப்படையில்தான் இரண்டு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அந்த உத்தரவை கூட இவர்களால் அமல்படுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் சரியான முறையில் வாதங்களை எடுத்து வைத்து, நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை மாதாந்திர வாரியாக பெற முடியாத அரசு, கையாலாகாத அரசு தமிழக வெற்றிக் கழக அரசு. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி வாழ்கின்ற விவசாய தொழிலாளிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+