திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரையில் நாளை நடக்கும் அமைதி பேரணி.. பங்கேற்கும் திருமாவளவன்!
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை நடக்க உள்ள அமைதி பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை மறுநாள் கார்த்திகை திருநாளன்று மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ள உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. தீபம் ஏற்றும் இடத்திற்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டும் செல்ல வேண்டும் என்றும், அவர்களை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை மாலை அமைதி பேரணி நடக்க உள்ளது. இந்த அமைதி பேரணியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும் வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்குத் தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல் தூணில் ஏற்றுவோம் என்றுதான்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தீர்ப்பு மதுரையில் நிலவும் நல்லிணக்கமான சூழலைப் பாதிக்கும் வகையிலான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், விசாரணையைத் தொடங்காமலேயே, ஆதாரங்களை ஆய்வு செய்யாமலேயே நிபந்தனையுடன் இப்போதைக்கு அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே ஆகும்.
வழக்கமாக, ஆய்வுக்கு முன்னர் இடைக்காலத் தீர்ப்பு, 'ஸ்டேட்டஸ் க்வா' (Status qua) -இருக்கும் நிலையே தொடரட்டும் என்றே வழங்குவர். ஆனால், இந்த தீர்ப்பு அவ்வாறின்றி இறுதி தீரப்பு இப்படி தான் இருக்கும் என சொல்லாமல் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனுவைத் (ரிவீயூ) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அரசின் நேர்மையான இந்த நிலைபாட்டினை விசிக வரவேற்கிறது.
அத்துடன் , இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை (நவ-23) மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் விசிக சார்பில் நான் பங்கேற்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பு வந்த போது, மதுரையில் மத நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது.


Click it and Unblock the Notifications
