8 உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. காதணி விழாவுக்கு சென்ற போது நிகழ்ந்த கோரம்! பிரதமர் மோடி இரங்கல்!
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கோர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல், சுப்ரமணி, பாவாடை, சீதாராமன், மாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக திருக்காட்டுப்பள்ளியில் இருந்து காரில் சென்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது துறையூர் - முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். முதற்கட்டமாக 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல், சுப்ரமணி, பாவாடை, சீதாராமன் மற்றும் மாணிக்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்த 8 பேரின் உடல்களும் முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியபோது நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம், அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும், திருச்சி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வுக்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.





Click it and Unblock the Notifications
