கோவை கல்லூரி மாணவன் கொலை.. உதயநிதி கவன ஈர்ப்பு தீர்மானம்.. சட்டசபையை அதிரவைத்த திமுக
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பாதிப்படைந்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு பாதிப்பு தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவன் கொலை குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
கோவை கல்லூரி மாணவர் போதை கும்பலால் கொலை செய்த சம்பவம் குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கவன ஈர்ப்பு தினம் கொண்டு வந்தார். அப்போது பேசிய உதயநிதி, "தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 4 கொடூர சம்பவம் நடந்துள்ளது. போதை பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் காவல்துறையின் பணி. ஆனால் போதை பொருள் விற்பனை செய்தவர்களை அழைத்து, புகார் சொல்லியவரின் விபரங்களை சொல்லியுள்ளனர்.

கோவை மாணவன் கொலை
அந்த கோபத்தில் தான் கோவை கல்லூரி மாணவர் அமுதனை போதை கும்பல் அடித்து கொலை செய்ததாக, அவரின் பெற்றோர் ஊடகங்களில் பேட்டியளித்துள்ளனர். காவல்துறை ஏன் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்று இந்த அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நிச்சயமாக நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர், "திங்கள் கிழமை இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து கொள்வதாக கூறியுள்ளோம். இதுபோதும்ங்க. நடந்த சம்பவம் அனைத்தையும் கூறிவிட்டீர்கள். திங்கள்கிழமை இதைப்பற்றி விரிவாக பேச அனுமதிக்கிறேன். நீங்கள் கொடுத்த தீர்மானத்தின்படி, கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் போதை பொருள் பயன்பாடு குறித்து புகாரளித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்பவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
மாணவருக்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். உங்கள் கவலைகளை சொல்லிவிட்டீர்கள். நாங்கள் எடுத்து கொள்கிறோம். முழு விபரத்தை சேகரித்து அரசு பதில் அளிக்கும். உங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு திங்கள் கிழமை பதில் வரும்" என்றார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக பதில் தெரிவிக்க வேண்டும் என கேட்டனர்.
அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பதிலில், "கோவை மாவட்டம் இந்துஸ்தான் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை, மாணவருக்கு மற்ற மாணவர்களுடன் ஏற்கனவே இருந்த மோதல் காரணமாக என அவர் பேசிக் கொண்டிருக்கும்போது", திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
