கோவை நிமிர்கிறது.. கொட்டப்படும் தமிழக அரசின் நிதி.. சென்னை அடுத்து கோயம்புத்தூர் தான்.. பலே வளர்ச்சி
சென்னை: கோவை மாநகராட்சி குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முக்கிய தகவல் ஒன்றை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, கோவையில் ரூபாய் 10,740 கோடி மதிப்பிலும், மதுரையில் ரூபாய் 11,368 கோடி மதிப்பிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என்றும் கூறியிருந்தார்.

ரயில்வே திட்டம்: இதைத்தொடர்ந்து நடந்த விவாதத்தின்போது, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.. எப்போது பணிகள் தொடங்கும்? என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
வானதிக்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் வருவதற்கு ஆர்வமாக உள்ள கோவை சட்டமன்ற உறுப்பினர், ஏன் இதுவரை மத்திய அரசு இதற்கு உரிய ஒப்புதல் அளிக்க மறுக்கிறது என்பதை கேட்டு சொல்லலாமே? கோவைக்கு அருகில் உள்ள கொச்சியில் மெட்ரோ ரயில் ஒப்புதல் அளித்த மத்திய பாஜக அரசு, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஏன் மறுக்கிறது?
மத்திய அரசு: இதுவரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவான 69 ஆயிரம் கோடி ரூபாய் முழுவதும் மாநில அரசின் சொந்த செலவிலேயே செயல்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை மெட்ரோ திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொடுக்கவில்லையே ஏன்?
எனவே, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள், மத்திய அரசிடம் விரைவில் கோவை மெட்ரோ ரயிலுக்கு ஒப்புதல் அளிப்பதுடன் அதற்கான நிதியையும் வழங்க வலியுறுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மெட்ரோ திட்டம்: இதையடுத்து எழுந்து பேசிய வானதி சீனிவாசன், "சென்னை, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் குறித்த தககல்களை கொடுத்தால் நிச்சயமாக மத்திய அரசுடன் பேசி உதவி செய்யத் தயார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக எந்தவிதமான அரசியலும் பார்க்காமல் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயார்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது.. நேற்றைய தினம் கோவை மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து சட்டசபையில் விவாதம் நடத்தப்பட்டது. அதன் சுருக்கம்தான் இது:
வானதி சீனிவாசன்: கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மெதுவாக நடந்து, ஒரு வழியாக முடிந்துள்ளன. ஆனால், பராமரிப்பு பணிகள் மிகவும் மோசமாக உள்ளன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளங்கள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்துள்ளன.
நாட்டில் வேகமாக முன்னேறும் மாநிலங்களில், ஒன்றாக தமிழகம் உள்ளது. அதேநேரத்தில், அதிக கடன் வைத்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியும், தமிழகம், கேரளாவிற்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்குவதாக சொல்கிறார்கள்.. அதையே நான் கேட்கிறேன். கோவை, தர்மபுரி, அரியலுாரில் ஒரு ரூபாய் வரி வாங்கினால் எவ்வளவு தருகிறீர்கள்? இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்க வேண்டும்
தங்கம் தென்னரசு: மாவட்டங்களின் சீரான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குகிறோம். பட்ஜெட்டில் கோவைக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய தொழிற்நுட்ப பூங்கா, பாதுகாப்பு தொழில்வட சிப்காட், புதிய விமான நிலையம் ஆகியவை வரவுள்ளன. உங்கள் தொகுதிக்கும் எல்லாம் கொடுக்கிறோம். ஆனால், மத்திய அரசு கோவையை விட்டுவிட்டு, அருகில் உள்ள கொச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கிஉள்ளது.
வானதி சீனிவாசன்: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு அதிக நிதியை, தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து குஜராத், மஹாராஷ்டிராவை சேர்க்கவில்லை. தமிழகத்திற்கு கொடுத்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு கடன் உதவிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட கடன் அளவில் 15 சதவீதத்தை கூட, தமிழக அரசு செலவிடாமல் உள்ளது. கோவைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க, மத்திய அரசு தயாராகவுள்ளது. அதற்கான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.
அமைச்சர் நேரு: எப்போது பேசினாலும், கோவைக்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை என்று வானதி தொடர்ந்து சொல்கிறார். கோவை மாநகராட்சி சாலைகளுக்கு மட்டும், 300 கோடி ரூபாயும், தொல்காப்பியர் பூங்காவிற்கு 100 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய மழைநீர் கால்வாய் பணிக்கு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. குளங்கள் சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடித்து தரப்படும். சென்னை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சிக்கு தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு நேற்றைய தினம் விவாதம் நடந்தது... அந்தவகையில், சென்னைக்கு அடுத்து, கோவைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுடன், கோவை மெட்ரோ பணிகளும் இனி வேகமெடுக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications