கோவை மாணவர் மரணம்! நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை ஏற்க தயங்குகிறதா தவெக அரசு?
சென்னை: கோயம்புத்தூரில் பட்டியல் சமூக மாணவர் ஒருவர் சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுகளை களைய, முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். அரசு இதை அமல்படுத்த தயங்குகிறதா? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.
கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் அகிலன் எனும் மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அகிலன் கை உயர்த்தியதால், சக மாணவர்களால் அவர் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை
இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அகிலனின் பெற்றோர் கூறுகின்றனர். நிலைமை இப்படி இருக்கையில் அகிலன் நேற்றைய தினம் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி மாணவர்களிடம் சாதிய மனநிலையை ஒழிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களிடம் சாதிய வண்ணம்
முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு இதேபோல திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்போதைய திமுக அரசு, இனி வரும் காலங்களில் சாதிய மோதல்களை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்ககைகள் குறித்து, அரசுக்கு பரிந்துரைக்க சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் 2024ம் ஆண்டு தனது பரிந்துரைகளை அரசுக்கு முன்வைத்தது.
பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய மாற்றம்
அதில், பல முக்கியமான விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக பள்ளிகளில் 'கள்ளர் மறுவாழ்வு', 'ஆதிதிராவிடர் நல' போன்ற அடையாள சொற்கள் நீக்கப்பட வேண்டும். இப்படியான பள்ளிகள் அனைத்தும் 'அரசு பள்ளிகள்' என்றே குறிப்பிடப்பட வேண்டும். பள்ளிகள் அமைந்துள்ள ஊரின் பெயரை சேர்த்துக்கொள்ளும்போது குழப்பம் வராது. அதேபோல மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடியின நலத்துறைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்..
சாதிய விவரங்கள்
பள்ளிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும். மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள், உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படும்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள பெரும்பான்மை சாதியினரை சேர்ந்தவர் அல்லாதவராக நியமிக்கப்பட வேண்டும். தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகளை தவிர.. ஆசிரியர்கள் உட்பட எவரின் பார்வைக்கும் மாணவர்களின் சாதி விவரங்கள் தெரியும்படி வைக்கப்பட கூடாது.
சாதிய அடையாளங்கள்
உதவித்தொகையை பெறுபவரின் விவரங்கள் பொதுவாக அறிவிக்கப்பட கூடாது. குறிப்பாக மாணவர்களின் கைகளில் சாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கையிறுகள் அணிந்துவர அனுமதிக்க கூடாது. சாதியை அடையாளப்படுத்தும் வகையில் நெற்றியில் வைக்கப்படும் பொட்டுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் சைக்கிள்களில் சாதியை அடையாளப்படுத்தும் குறியீடுகள் இருக்கக்கூடாது.
அரசு விழித்துக்கொள்ளுமா?
இப்படி பல பரிந்துரைகளை நீதிபதி சந்துரு கொடுத்திருக்கிறார். இந்த பரிந்துரைகள் கடந்த ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், நாங்கள்தான் தூய சத்தி என்று சொல்லிக்கொண்டிருக்கும் தவெக அரசு, இந்த பரிந்துரைகளை அமல்படுத்துமா? என பெற்றோர்கள், கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இன்னொரு அகிலனை இழப்பதற்கு முன், தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?




Click it and Unblock the Notifications
