கோவை மாணவர் கொலை விவகாரம்.. தவெக அரசை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்
சென்னை: கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், தவெக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக மாணவர் அணி செயலாளர் ஈரோடு ஜெ.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், தவெக அரசின் கவனக் குறைவால் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போதைப் பொருள் புழக்கத்தை பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்த மாணவர் அமுதனை போதை பொருள் கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளது.

இதனை கல்லூரி நிர்வாகமும், ஆளும் தவெக அரசின் காவல் துறையும் மூடி மறைக்க முயற்சித்து வருகின்றனர். இதை கண்டித்து கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில், மாணவர் அணிச் செயலாளர் ஈரோடு ஜெ.வீரமணி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை 9 மணிக்கு கோவை இந்துஸ்தான் கல்லூரி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாணவர் கொலையை மூடி மறைக்கும் தவெகவை கண்டித்து திமுக மாணவர் அணியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, எம்பி ஈஸ்வர சாமி, சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சுமார் 250 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்கும் வாசகங்கள், முதல்வரை கண்டிக்கும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 250 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் ஆட்சியைக் கண்டித்தும், முதல்வரை கண்டித்தும் கண்டன உரையாற்றினார். தவெக அரசு பொறுப்பேற்றது முதல் காவல் துறையினர் அராஜகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.


Click it and Unblock the Notifications
