இருமல் மருந்து விவகாரம்.. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டு, மத்தியப்பிரதேசத்தில் 24 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா பகுதியில் ஏராளமான குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்த நிலையில், குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் சில குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருமல் மருந்து சர்ச்சை
விசாரணையில் கோல்ட்ரிஃப் என்கிற இருமல் மருந்தை உட்கொண்டதில் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது. தற்போதுவரை இந்த சம்பவத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோல்ட்ரிஃப் மருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஶ்ரீ சென் பார்மா நிறுவனம் உற்பத்தி செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்தியப்பிரதேச மாநிலம், சிறப்புப் புலனாய் குழு தமிழ்நாடு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த இரும்பல் மருந்தில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்தது தெரியவந்தது. இதன் காரணமாக தான் குழந்தைகள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், பெண் வேதியியல் ஆய்வாளர் உள்ளிட்டோரை கைது செய்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அந்த மருந்து விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் அதிர்ச்சி
மத்தியப்பிரதேசத்தில் அந்த மருந்த்தை பரிந்துரை செய்த மருத்துவர், மருந்தக உரிமையாளர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த நிறுவனம் பல்வேறு விதிமீறல், முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது. கடந்த 6 வருடங்களாக மருந்து நிறுவனங்களில் மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை. அதுதான் விதிமீறலுக்கு முக்கிய காரணம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் குற்றம் சாட்டியிருந்தார். மறுபக்கம் இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள்.
சட்டமன்றத்தில் தீர்மானம்
தற்போது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இருமல் மருந்து விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதிமுக, பாஜக உறுப்பினர்கள் ஆதரவுடன் பழனிசாமி, இந்த பிரச்சனையை எழுப்பி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications
