நகைக்கடன் பெறுவது எதற்கு தெரியுமா சார்? ரிசர்வ் வங்கி கொண்டு வந்த விதி.. பொதுமக்கள் எதிர்ப்பு!
சென்னை: இந்தியாவில் வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கு 9 புதிய விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி தங்க நகைகளுக்கு 75 சதவிகித பணம் அளிக்க வேண்டும், தங்க நகைகள் தங்களுடையது என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும், நகைகள் தங்கம் தான் என்ற தூய்மை சான்றிதழ் அளிக்க வேண்டும், நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டுக்கும் வங்கிகளில் அடகு வைக்கும் நகைகளை மீண்டும் முழு தொகை கொடுத்து திருப்பிவிட்டு, மறுஅடகு வைக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. தற்போது புதிய விதிகளும் இருப்பதால், வங்கிகளில் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து, பொதுமக்கள் அடகு கடைகளை நோக்கி நகரும் நிலை உருவாகி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகள் பொதுமக்களிடையே எதிர்ப்பை பெற்று வருகிறது.

பொதுமக்கள் கருத்து
ஏனென்றால் தமிழ்நாட்டில் நகை வாங்கும் ரசீதுகளை வைத்திருப்பது சவாலான விஷயம். இவை இல்லையென்றால் மருத்துவ செலவு, கல்வி செலவு, திருமண செலவு மற்றும் இதர செலவுகளுக்கான அவசர தேவையை சமாளிப்பது கடினம். இதுதொடர்பாக பொதுமக்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரு நகையை நாங்கள் ஏன் வங்கியில் அடகு வைத்து கடன் வாங்குகிறோம் என்று தெரியுமா? நாங்கள் என்ன வீட்டில் வைத்து கொள்ள முடியாமல் கொண்டு சென்று வங்கியில் கொடுக்கிறோமா?
வங்கியில் சோதனை செய்யலாமே?
எங்களின் கஷ்டங்களையும், சூழ்நிலையையும் சமாளிக்க அடகு வைக்கிறோம். அப்படியான நேரத்தில் 9 விதிகளை கொண்டு வந்தால், நாங்கள் என்ன செய்வது? ஒரு நகையை அடகு வைப்பதற்கு முன்பாக அது ஒரிஜினல் தங்கமா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டுமாம்.. அதனை வங்கியிலேயே சோதனை செய்ய முடியும் தானே? அதற்கு ஏன் உங்களிடம் வர வேண்டும்.. கடையில் சென்று விற்றுவிடலாமே.. தங்கம் விற்கும் விலையில் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு வருகிறோம்.
நாணயங்களை வாங்குவதில்லை
இந்த நேரத்தில் அடுக்கடுக்கான திட்டங்களை ரிசர்வ் வங்கி போட்டு கொண்டே போகிறது. இது என்ன மக்களை வாழ வைப்பதற்கு தானா? ஏழைகளுக்கு என்ன தேவை என்பதை பாருங்கள். வங்கியில் உள்ள கெடுபிடிகளால் தான் ஃபைனான்ஸ் நிறுவனங்களிடம் அடகு வைத்து வந்தோம். இப்போது அதற்கும் விதிகளை கொண்டு வந்தால், நாங்கள் எங்கே நகைகளை அடகு வைக்க முடியும்? அதேபோல் வங்கியில் எப்போதும் தங்க நாணயங்களை வாங்க மாட்டோம் என்கிறார்கள்.
செய் கூலி, சேதாரம்
செய் கூலி, சேதாரத்திற்கு பயந்துதான் நாங்கள் நாணயங்களை வாங்குகிறோம். ஏனென்றால் நாணயங்களை அடகு வைத்து செலவு செய்ய முடியும் என்று நம்பி நாணயங்களை வாங்கினால், வங்கிகளில் வாங்குவதில்லை. அதேபோல் அடகு நகைகளுக்கு 75 சதவிகிதம் தான் கொடுப்போம் என்று விதியை கொண்டு வந்துள்ளார்கள். 100 சதவிகிதம் கொடுக்கும் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் வைத்தால், இரவோடு இரவாக தூக்கி கொண்டு ஓடிவிடுகிறார்கள்.
கோரிக்கை
இல்லையென்றால் நகையை மாற்றி கவரிங்கை கொடுத்துவிடுகிறார்கள். இப்போது அடகு நகைகளுக்கு 75 சதவிகிதம் தான் என்றால், நாங்கள் என்ன செய்வது? தங்க விலை ஏறும் போது, அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். 25 ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு போடப்பட்ட நகைகளுக்கு நாங்கள் எங்கே சென்று தூய்மை சான்றிதழ் பார்ப்பது? பாமர மக்களுக்கு தேவையான திட்டமாக கொண்டு வாருங்கள். இதற்கு அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications