அச்சு அசலாக ஒரே மாதிரி தவெகவுக்கு ஆதரவு கடிதம்.. கம்யூனிஸ்ட்கள் இரண்டும் கடைசி லைனில் ட்விஸ்ட்
சென்னை: அச்சு அசலாக ஒரே பார்மட்டில், ஒரே மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி தவெகவுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளன இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள். நிலையான, மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சியை அமைப்பதே நோக்கம் என இரண்டு கடிதத்திலும் கடைசி பன்ச் வைத்துள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவு தருவதற்கான காரணத்தையும் ஒரே குரலில் சொல்லியிருக்கின்றன. அதற்கு காரணம் குடியரசு தலைவர் ஆட்சி 10ம் தேதிக்கு பிறகு அமல்படுத்தப்படும் என்பது தான் காரணம் ஆகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் "தமிழக வெற்றி கழகம்" (த.வெ.க) ஆட்சியமைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசாமி மற்றும் எம்.எல்.ஏ டி. லதா ஆகியோர் ஆளுநருக்கு நிபந்தனையற்ற ஆதரவுக் கடிதத்தை வழங்கியுள்ளனர். ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2026 ஏப்ரல் 23-ல் நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் ஒரு நிலையான மற்றும் ஜனநாயகமான ஆட்சியை வழங்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன் இந்தக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க, அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றனர். இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டுமே இப்போது அதிகாரப்பூர்வமாக விஜய்க்கு ஆதரவு தந்துவிட்டன. "மதச்சார்பற்ற" என்ற வார்த்தையை இந்தக் கடிதத்தில் அவர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இது விஜய் மீது வைக்கப்படும் சில விமர்சனங்களுக்குப் பதிலாக அமையும் என்று கூறப்படுகிறது. அவர்கள் நிலையான ஆட்சி வேண்டும் என்று கடைசியில் குறிப்பிட்டிருக்கின்றன.
இடதுசாரிகள் கடிதம் அளித்த கையோடு வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்
த.வெ.க-விற்கு ஆதரவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஆகியோர் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் அடுத்த அரசு அமைப்பதற்குத் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
திருமாவளவனின் நிலைப்பாடு
மிக முக்கியமான விஷயம் இதுதான்- இடதுசாரிகள் எடுத்துள்ள இதே முடிவைத்தான் விசிக தலைவர் திருமாவளவனும் ஆதரிக்கிறார் என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விசிக-வும் விரைவில் தனது ஆதரவைத் த.வெ.க-விற்கு வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.
ஏன் இந்த ஆதரவு?
மே 10-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று சண்முகம் எச்சரித்துள்ளார். அதைத் தடுப்பதற்காகவே த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்ததாகக் கூறியுள்ளனர்.
வெளியில் இருந்து ஆதரவு
விஜய்யின் அரசில் தாங்கள் அமைச்சர்களாகப் பங்கேற்கப் போவதில்லை என்றும், வெளியில் இருந்தே ஆதரவு அளிக்கப்போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இது ஒரு "தேர்தல் கூட்டணி" அல்ல, அரசு அமைப்பதற்கான ஆதரவு மட்டுமே என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக-விற்கு எதிரான வியூகம்
ஆளுநர் மூலமாகத் தமிழகத்தை ஆள பாஜக முயற்சிப்பதாகச் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக-வின் இந்தத் திட்டத்தைத் முறியடிக்கவே விஜய்யை ஆதரிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
திமுகவிற்கு பெரிய அடி
திமுக-அதிமுக-விற்கு இது ஒரு மிகப்பெரிய 'செக்' ஆக பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளும், விசிக-வும் விஜய்யின் பக்கம் சாய்ந்தால், ஆளுநரால் இனி விஜய்யைப் புறக்கணிக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. "வெளியில் இருந்து ஆதரவு" என்று சொல்வதன் மூலம், திருமா தனது சித்தாந்தப் பிம்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதாகவே பார்க்கப்படுகிறது., அதே சமயம் விஜய்யை அரியணையில் அமர்த்திய 'கிங் மேக்கர்' பெருமை திருமாவளவன் மற்றும் இடதுசாரிகளுக்கு கிடைக்கும். அதேநேரம் இத்தனை காலத் தோழமை கட்சிகள் கையை விட்டுப் போனது திமுக-விற்குப் பலத்த அடியாகும்.














Click it and Unblock the Notifications