முதல்வர் விஜய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய இவ்வளவு சிக்கலா? தலைமைச் செயலக சங்கம் சொன்ன விஷயம்
சென்னை:சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, முதல்வர் விஜய்யின் அலுவலகம் மாற்றப்பட உள்ளது. இதனை வரவேற்றுள்ள தலைமை செயலக சங்கம், 9-வது தளத்திலும் இயங்கும் வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் மற்றும் உள் துறை பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்றது. இதில் விசிக, முஸ்லீம் லீக், இடதுசாரிகள் மற்றும் அதிமுகவில் கணிசமானோரின் ஆதரவுடன் முதல்வர் விஜய் ஆட்சியமைத்துள்ளார். கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அடுத்த சில வாரங்களில் அமைச்சர்களுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டது. விஜய் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை மாதத்தில் பல்வேறு மாற்றங்கள் தலைமை செயலகத்தில் நடந்து வருகின்றன. தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் தற்போது இடமாற்றம் செய்யப்படுகிறது.

தலைமைச் செயலக வளாகத்தில் 2 கட்டிடங்கள் உள்ளன. பிரதான புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள 3 தளங்களில் முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. மற்றொரு கட்டிடம் 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையாகும். இதில் துறை செயலர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன,
இதற்கிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. வாகன நிறுத்துமிட வசதி குறைபாடு மற்றும் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளது. இதன் காரணமாக முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற விஜய் முடிவு செய்தார். அதேபோல் முதல்வர் அலுவலகத்தை மாற்ற வேண்டுமென ஜோதிட ரீதியாகவும் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அதன்படி, நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் முதல்வர் அலுவலகம் மாற்றப்படுகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த சூழலில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தலைவர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற உள்ளது. இதை எங்கள் சங்கம் வரவேற்கிறது. இதனால் அந்த தளத்திலும், 9-வது தளத்திலும் இயங்கும் வணிகவரி, பதிவு, அறநிலையங்கள் மற்றும் உள் துறை பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கூட்ட அரங்குகள் மற்றும் உணவறைகளில் துறைகளை இடமாற்றம் செய்வது, கோப்புகளை பராமரிக்கவும் பணியாளர்கள் பணியாற்றவும் போதிய இடவசதி கிடைக்காமல் பாதிப்பை ஏற்படுத்தும். நவீனமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே பணியாளர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். முக்கியமாக, ஆகஸ்டு 5-ந்தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கை பணிகளை இந்த இடமாற்றம் வெகுவாகப் பாதிக்கும்.
எனவே, இடமாற்றம் செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பான அலுவலக இடங்களை ஒதுக்கி, அரசுப்பணிகள் தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தலைமை செயலக ஊழியர்கள் கூறும் போது, உள்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறையின் பணியாளர் களையும், அத்துறைக்கு உட்பட்ட கோப்புகளையும், பதிவேடுகளையும், முதல்வர் அலுவலகத்திற்கு ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்வதற்கு போதுமான இடவசதி இல்லை என்றும், செய்தித்துறை தலைமை செயலகத்தில் தான் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.
தலைமை செயலக பிரதான கட்டடத்தில் ஏதேனும் பெரும் தீவிபத்து ஏற்பட்டால், உள்துறையின் சில பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள், அந்த விபத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பணியாற்றி வருவதாகவும் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும்
இடமாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்கும், மாற்று வழிகளை மேற்கொள்வதற்கும் சங்க நிர்வாகிகளை அழைத்து, பொதுத் துறை அதிகாரிகள் பேசவில்லை என்றும் அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
